SELANGOR

சிலாங்கூரில் மலாய் ரிசர்வ் நிலம் குறைந்து விட்டதா? பாஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு மாநில அரசு மறுப்பு

ஷா ஆலம், ஏப் 11- சிலாங்கூரில் மலாய் ரிசர்வ் நிலத்தின் அளவு குறைந்து விட்டது என்ற சிலாங்கூர் மாநில பாஸ் கட்சியின் குற்றச்சாட்டை மாநில அரசு வன்மையாக மறுத்துள்ளது.

கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் மலாய் ரிசர்வ் நிலத்தின் அளவு குறைந்து விட்டது என்ற அக்கட்சியின் குற்றச்சாட்டு அவதூறானது என்பதோடு உண்மைக்கு புறம்பானதும் ஆகும் என்று என்று மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள மலாய் ரிசர்வ் நிலத்தின் பரப்பளவு 160,233.86 ஹெக்டராக (395,946.50 ஏக்கர்) இருந்தது என்று அவர் சொன்னார்.

பாஸ் கட்சி இம் மாநில அரசிலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு விலகியப் பின்னர் மலாய் ரிசர்வ் நிலத்தின் அளவு கணிசமாக ஏற்றம் கண்டு கடந்த 2019 இல் 401,935.96 ஏக்கராகவும்  2021 ஆம் ஆண்டு 403,123.39 ஏக்கராகவும் உயர்ந்தது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில் உலு லங்காட்-ஹிலிர் தம்பஹான், கோல லங்காட்- குண்டாங், கோம்பாக்-செலாயாங் பிண்டா, உலு லங்காட்-உலு செமினி, பெட்டாலிங்- செராக்கா ஆகிய ஆர்ஜிதம் செய்யப் பட்ட பகுதிகள் உள்பட மாநிலத்திலுள்ள மலாய் ரிசர்வ் நிலத்தின் பரப்பளவு 7,176.89 ஏக்கர் அதிகரித்துள்ளது என்பது இதன் பொருளாகும் என்றார் அவர்.

மலாய் ரிவர்வ் நிலங்களைப் பாதுகாப்பது மாநில அரசின்  தலையாய கடப்பாடாக உள்ளதோடு மாநில நில மற்றும் கனிமவளத் துறையின் வாயிலாக அந்நிலங்கள் அணுக்காக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில மக்களிடம் பொய்யுரைத்ததற்காகப் பாஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்பதோடு புனித நோன்பு மாதத்தில் இத்தகைய பொய்களைப் பரப்பியதற்காக மனம் வருந்தி தன்னைத் திருத்திக் கொள்ளவும் வேண்டும் என்று அவர் சொன்னார்.


Pengarang :