NATIONAL

கார்  மரத்தை மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்

சுங்கைப் பட்டாணி, ஏப்.26: நேற்றிரவு சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனை (எச்எஸ்ஏஎச்) முன்பு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். புரோட்டான் வாஜா ரக காரை ஓட்டி சென்ற அந்த நபர் சாலையில் கிடந்த மரத்தை மோதியதில் இ துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கெடாவில் உள்ள மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செய்தித் தொடர்பாளர், இரவு 8 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட எஸ்.கார்த்திகேசு (52), சம்பவ இடத்திலேயே இறந்தார்.

“நேற்று இரவு 8.27 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. உடனே ஆபரேஷன் கமாண்டர் உதவி தீயணைப்புத் தலைவர் அசஹரி அப்துல்லா தலைமையிலான அமான் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) குழு அவ்விடத்திற்கு விரைந்தது.

“அங்கு சென்றவுடன் பாதிக்கப்பட்டவர் காரில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் பின்னர் வெற்றிகரமாகக் காரிலிருந்து அகற்றப்பட்டார். இருப்பினும் சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தது.

மரம் விழுந்ததில் மேலும் ஐந்து வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக வும், ஆனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை முழுமையாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது காரணம் பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களால் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றிலும் 10 க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளதாகவும், மின்கம்பம் ஒன்று சாலையை மறைக்கும் வண்ணம் விழுந்ததால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“காவல்துறையினர், சுகாதார அமைச்சகம், மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை (ஏபிஎம்), சுங்கை பட்டாணி கெடா மாநகராட்சி (எம்பிஎஸ்பிகே), தன்னார்வ தீயணைப்புப் படை (பிபிஎஸ்) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று அவர்  தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :