NATIONAL

தனியாக வசித்து வந்த முதியவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்

ஜொகூர் பாரு, ஏப்.27: மூவாரில் உள்ள தாமான் பெர்டானா, ஜாலான் பெர்டானா 2ல் தனியாக வசித்து வந்த முதியவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மூவார் மாவட்ட காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் கூறுகையில், 75 வயதான அந்நபரை அவரது உறவினர் தொடர்பு கொள்ள முடியாமல் போன நிலையில் இரவு 10.47 மணி அளவில் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

“பாதிக்கப்பட்டவரின் உறவினர் அந்த வீட்டுக்குச் சென்றதாகக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்நபர் வீட்டின் முன் துர்நாற்றம் வீசுவதாகக் கூறியுள்ளார்.

“சோதனை நடவடிக்கையில், பாதிக்கப்பட்டவர் வரவேற்பு அறையில் கட்டிலில் படுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் இறந்து நீண்ட நாட்களாக ஆகி விட்டது என நம்பப்படுகிறது,” என்று அஸ்மான் அசிஸ் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

அந்த நபரின் மரணம், சம்பவ இடத்தில் இருந்த சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையின் மருத்துவ குழுவால் உறுதிப் படுத்தப்பட்டது என்றார்.

பரிசோதனையின் முடிவில் பாதிக்கப்பட்டவரின் உடலில் குற்றச் செயல்களுக்கான தடயங்கள் அல்லது அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்டவர் கடந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி இரத்தக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டது தெரிய வந்துள்ளது என்றும் ரைஸ் முக்லிஸ் கூறினார்.

பாதிக்கப் பட்டவருக்கும் புரோஸ்டேட் நோய் இருப்பதாகவும், அவர் கோவிட்-19 ஊசி போட்டுக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த வழக்கு திடீர் மரணமாக விசாரிக்கப்படுவதாக விளக்கினார்.

– பெர்னாமா


Pengarang :