NATIONAL

நிலச்சரிவு மோசமடைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள்- செந்தூல் போலீஸ் தலைவர் தகவல்

கோலாலம்பூர், ஏப் 27 – இங்குள்ள மலேசிய ஊழல் தடுப்பு அகாடமி  அருகே மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்படும் மூன்று உடனடி நடவடிக்கைகளில் ஒன்றாக நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை கேன்வாஸ் பைகள் மூலம் மூடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மூடும் பணி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கப்பட்டு இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பேரிடர் நடவடிக்கை குழுத் தலைவர் ஏசிபி பெ எங் லாய் தெரிவித்தார்.

நீர் ஓட்டத்தை நிறுத்துவது அல்லது நீர்  நிலத்தில் ஊடுருவுவதைத் தடுப்பது மற்றும் நீர் எளிதாக கீழே பாய்ந்தோடுவதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் அப்பகுதி மூடப்படுவதாக என்று அவர் செந்தூல் மாவட்ட காவல்துறையில் நடைபெற்ற  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) மற்றும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உட்பட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான சந்திப்பில்

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செந்துல் மாவட்டக் காவல்துறைத் தலைவருமான அவர்  சொன்னார். மேலும், நிலச்சரிவுப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மலேசிய உயர்நெறிக்கழக  வேலியின் எல்லைப் பகுதியிலும் எஃகு தூண்களை நிறுவும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கும் என்றும் அப்பணிகள் முடிவடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். எஃகு தூண்களை பொருத்தும் பணி நிறைவடைந்த பின்னர் அந்த அகாடமியின் வளாகத்தில் சிக்கியுள்ள வாகனங்களை அகற்றுவதற்காக எம்ஏசிஏ கட்டிடத்திற்கு புதிய  சாலை அமைக்கப்படும் என்றார் அவர்.

எம்.ஏ.சி.ஏ.வுக்கு சொந்தமான கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பேருந்துகள் உட்பட சுமார் 50 வாகனங்கள் அங்கு உள்ளன. அகாடமியின் நுழைவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவற்றை அகற்ற முடியவில்லை. இது வளாகத்தின் உள்ளே செல்லும் மற்றும் வெளியேறும்  ஒரே வழியாகும் என்று பெ தெரிவித்தார்.


Pengarang :