SELANGOR

தொழிலாளர்களைச் சுயமாகச் சொக்சோவில் பதிவு செய்ய முதலாளிகளுக்கு ஜூன் வரை வாய்ப்பு

கோலாலம்பூர், மே 2- தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை
முதலாளிகள் சுயமாக சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தில் (சொக்சோ) பதிவு
செய்வதற்கான சட்டப்பூர்வ மாத இயக்கம் வரும் மே முதல் தேதி
தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்தகைய சட்டப்பூர்வமாக்கும் இயக்கம் கடந்த காலங்களில் ஒரு
மாதத்திற்கு நடத்தப்பட்ட வேளையில் முதன் முறையாக தற்போது இரு
மாதங்களுக்கு இது அமல்படுத்தப்படுகிறது என்று சொக்சோ தலைமைச்
செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ்
முகமது கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலுக்கு பிந்தைய பொருளாதார
மேம்பாடுகளை கருத்தில் கொண்டு முதலாளிகள் தங்கள்
தொழிலாளர்களை சொக்சோவில் பதிவு செய்து சந்தா செலுத்தவதை
உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று
அவர் சொன்னார்.

ஆகவே, இது வரை தங்கள் தொழிலாளர்களை சொக்சோவில் பதிவு
செய்யாத முதலாளிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இணையம்
வாயிலாக அல்லது நாடு முழுவதும் உள்ள 54 சொக்சோ அலுவலகங்கள்
வாயிலாக பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அவர் ஆலோசனை
கூறினார்.

இந்த சட்டப்பூர்மாக்கும் மாதத்தின் போது, தாமதமாகத் தொழிலாளர்களைப்
பதிவு செய்த குற்றத்திற்கு அபராதம் விதிப்பதிலிருந்து முதலாளிகளுக்கு
விலக்களிக்கப்படும் என்பதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும்
எடுக்கப்படாது என அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த இயக்கம் முடிவுக்கு வந்தவுடன் மலேசியா மடாணி
செயல்திட்டத்திற்கேற்ப ஓப்ஸ் கெசான் 2023 இயக்கத்தை சொக்சோ
தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :