சீ போட்டியில் பதக்கம் வெல்லும் சிலாங்கூர் வீரர்களுக்கு சிறப்பு வெகுமதி

ஷா ஆலம், மே 7- கம்போடியாவில் தற்போது நடைபெற்று வரும் சீ போட்டியில் பங்கேற்றுள்ள சிலாங்கூர் விளையாட்டாளர்கள் பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு வழங்குவதற்காக மாநில அரசு சிறப்பு வெகுமதிகளை தயார் செய்துள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

போட்டிகளில் பதக்கம் வென்றால் நாம் நிச்சயம் வெகுமதி அளிப்போம். பாரா ஒலிம்பிக் விளையாட்டாளர்களுக்காக நாம் 10,000 வெள்ளி வரை ஒதுக்கீடு செய்துள்ளோம் என்றார் அவர்.

இந்த சீ போட்டியில் சிலாங்கூரைப் பிரதிநிதித்து கலந்து கொண்டுள்ள விளையாட்டாளர்கள் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம். பதக்கங்களுடன் வருவோரை நாம் ஒருபோதும் ஏமாற்றத்திற்குள்ளாக்க மாட்டோம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட நிலையிலான ஜெலாஜா கித்தா சிலாங்கூர் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் 5 முதல் 17ஆம் தேதி வரை கம்போடியாவில் நடைபெறும் சீ போட்டியில் சிலாங்கூர் சார்பில் 97 விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, இந்த போட்டியில் 40 தங்கம், 37 வெள்ளி மற்றும் 64 வெண்கலப் பதக்கங்களை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்கு மாநில விளையாட்டாளர்கள் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவார்கள் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக எம்.எஸ்.என். எனப்படும் சிலாங்கூர் விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குநர் நிஸாம் மர்ஜூக்கி கூறினார்


Pengarang :