SELANGOR

மேலும் மூன்று மறுசுழற்சி மையங்களை உருவாக்க எண்ணம் – KDEB கழிவு மேலாண்மை

ஷா ஆலம், மே 12: இந்த ஆண்டு KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மேலும் மூன்று மறுசுழற்சி மையங்களை (MRF) உருவாக்கும் என்று அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

அம்மையங்கள் கோலா லங்காட், உலு சிலாங்கூர் மற்றும் செலாயாங் ஆகிய இடங்களில் உருவாக்கப்படும் என டத்தோ ரம்லி முகமட் தாஹிர் கூறினார். இதன் மூலம் மாநிலத்தில் தற்போது மொத்தம் ஆறு மறுசுழற்சி மையங்கள் செயல்படவுள்ளன.

“கிள்ளான், சுபாங் ஜெயா மற்றும் சைபர் ஜெயாவில் ஏற்கனவே மூன்று மறுசுழற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில்

இந்த ஆண்டு மேலும் மூன்று மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இன்று இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் (SACC) KDEB கழிவு மேலாண்மையின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.

இம்மையங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பதப்படுத்தி புதிய பொருட்களைத் தயாரிக்கும் திறன் கொண்டது என்று ரம்லி கூறினார்.

“தற்போது, பிளாஸ்டிக் கழிவுகளை பயோடீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கொண்ட மூன்று நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்,” என்றார்.

அதேநேரம், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதோடு குப்பைகளைப் பிரித்து தருவதிலும் சமூகம் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“தற்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குப்பைகளை உருவாக்கும் நடவடிக்கையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நான் எண்ணுகிறேன். ஒரு வருடத்திற்குள், மலேசியர்கள் 1 பில்லியன் மக்காத பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகின்றனர்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, உள்ளூராட்சி எஸ்கோ இங் ஸீ ஹான் தனது தரப்பு ஒவ்வொரு உள்ளாட்சி அதிகாரத்திலும் (PBT) மறுசுழற்சி மையங்களை உருவாக்க பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு வருவதாகக் கூறினார்.


Pengarang :