NATIONAL

பிளஸ் நெடுஞ்சாலை விபத்து- சிறுவன் பலி

ஈப்போ, மே 16- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 310.2வது கிலோ
மீட்டரில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் பலத்தக் காயங்களுடன்
மீட்கப்பட்ட ஒரே சிறுவனும் தாப்பா மருத்துவமனையில் இன்று காலை
உயிழந்தார்.

முகமது பாவ்வாஷ் நசாருடின் (வயது 7) என்ற அந்தச் சிறுவன் சிகிச்சைப்
பலனின்றி காலை 9.30 மணியளவில் உயிரிழந்ததைக் கம்பார் மாவட்டப்
போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது நஸ்ரி டாவுட்
உறுதிப்படுத்தினார்.

இன்று அதிகாலை 2.42 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூன்று
உடன்பிறப்புகளான அக்மது உவாய்ஸ் குர்னி நசாருடின் (வயது 5), சித்தி
நுர் அமினா நசாருடின் (வயது 8), முகமது அஸிப் நசாருடின் (வயது 23)
ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புரோட்டோன் சாகா காரும் மணல் லோரியும் சம்பந்தப்பட்ட இந்த
விபத்தில் அந்த நால்வரின் தாயாரான அஸ்ரியானி அப்துல் லத்திப் (வயது
45) என்ற மாதுவும் பலியானார்.

இன்று அதிகாலை நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
அந்த ஐவரும் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள்
சென்று கொண்டிருந்த மணல் லோரியை மோதியது. இச்சம்பவத்தில்
நால்வர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர்.

இவ்விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான முகமது பவ்வாஷ்
தாப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் லோரி
ஓட்டுநர் காயமின்றி உயிர்த்தப்பினார்.

இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி கூறினார்.


Pengarang :