SELANGOR

 ‘பயன்படுத்திய புத்தகங்களை மறுசுழற்சி செய்தல்’ என்ற கருப்பொருளுடன் ஒரு சிறிய வாசிப்பு பகுதி அமைக்கும் போட்டி ஏற்பாடு 

ஷா ஆலம், மே 18: கிள்ளான் மாநகராட்சி (MPK) அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்களில், ஒரு சிறிய நூல் நிலையம் அல்லது வாசிப்பு பகுதியை அமைக்க, ‘பயன்படுத்திய புத்தகங்களை மறுசுழற்சி செய்தல்’ என்ற கருப்பொருளுடன் போட்டியையும் நடத்தவுள்ளது.

மே 15 முதல் இப்போட்டியின் பங்கேற்புக்கான விண்ணப்பம் திறந்திருக்கும். அதே நேரத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை அந்த வாசிப்பு பகுதிகளை மதிப்பாய்வு செய்து புள்ளிகள் வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என உள்ளாட்சி அமைப்பு தெரிவித்தது.

“அந்த வாசிப்பு பகுதிகள் மறுசுழற்சி கருப்பொருளுடன் இணங்க வேண்டும் மற்றும் நன்கொடையாக வழங்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் மீண்டும் பயன்படுத்த நல்ல நிலையில் இருக்க வேண்டும் ஆகியவை போட்டியின் நிபந்தனைகள் ஆகும்.

“மேலும், வாசிப்பு பகுதியில் வைக்கப்படும் புத்தகங்கள், அனைத்து வயதினரும் வாசிப்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். கேள்விகள் ஏதும் இருந்தால் எம்.பி.கே நகர மற்றும் கிராமத் திட்டமிடல் துறையைத் தொடர்பு கொள்ளலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM3,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். தொடர்ந்து, இரண்டாம் இடம் (RM1,500), மூன்றாம் இடம் (RM750) மற்றும் ஏழு ஆறுதல் பரிசுகள் (RM200) வழங்கப்படவுள்ளது என்று கிள்ளான் மாநகராட்சி அறிவித்துள்ளது.

“நிலையான வளர்ச்சிக்கு புத்தகங்களை அச்சிடும் நோக்கத்திற்காக காகிதத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையைக் குறைக்கவும் மறுசுழற்சி நடைமுறைப்படுத்தவும் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :