SELANGOR

தாமான் டெம்ப்ளர் தொகுதியில் ஒரு மணி நேரத்தில் 400 கோழிகள், 300 தட்டு முட்டைகள் விற்பனை

கோம்பாக், மே 23- இன்று இங்கு நடைபெற்ற தாமான் டெம்ப்ளர் தொகுதி
நிலையிலான ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையின் போது
ஒரு மணிக்கும் குறைவான நேரத்தில் 400 கோழிகளும் 300 தட்டு
முட்டைகளும் விற்றுத் தீர்ந்தன.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட
இந்த விற்பனையில் 300 பொட்டலம் அரசி, இறைச்சி மற்றும் மீன்
ஆகியவையும் 150 போத்தல் சமையல் எண்ணெயும் வெகு விரைவாக
விற்பனையாகின.

இந்த விற்பனையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதைக்
கருத்தில் கொண்டு ஒருவர் இரண்டு கோழி மற்றும் இரண்டு தட்டு
முட்டைகளை வாங்க அனுமதிக்கப்பட்டதாக பி.கே.பி.எஸ். நிர்வாக
அதிகாரி சித்தி அயிஷா மாட் அரிப் கூறினார்.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட தட்டு முட்டைகள் வாங்க அனுமதிப்பது
மிகவும் அரிதாகவே நடக்கும். இந்த விற்பனையில் கலந்து கொண்டவர்கள்
எண்ணிக்கை அதிகமாக இல்லாதது மற்றும் விற்பனைக்கு வந்தவர்களின்
கோரிக்கையின் பேரில் இரண்டு தட்டு முட்டைகளை வாங்க
அனுமதித்தோம் என்றார் அவர்.

இதனிடையே, பத்து கேவ்ஸ், தாமான் புக்கிட் இடாமான், மேராக்
அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட மலிவு விற்பனையில்
பங்கேற்க காலை 7.30 மணி முதல் பொது மக்கள் வரிசையில்
காத்திருந்ததாக அவர் சொன்னார்.

இங்கு எதிர்பார்த்ததை விட விரைவாகவே பொருள் விற்பனையானதால்
வியாபாரத்தை ஓரு மணி நேரம் முன்னதாகவே முடிவுக்கு கொண்டு வர
நேர்ந்தது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :