SELANGOR

பூச்சோங் வர்த்தக மையத்தில் சட்டவிரோதக் கட்டுமானங்களை எம்.பி.எஸ்.ஜே அகற்றியது

ஷா ஆலம், மே 26- வணிக வளாகங்களில் சட்டவிரோதமான முறையில்
நிர்மாணிக்கப்பட்ட இணைக் கட்டிடங்களை உடைக்கும் நடவடிக்கையை
சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்டது. பூச்சோங், பண்டார் புத்ரி u
2/3 வர்த்தக மையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த
நடவடிக்கையில் 13 வளாகங்களில் கூடுதலாக நிர்மாணிக்கப்பட்டிருந்த
கட்டுமானங்கள் அகற்றப்பட்டன.

அந்த 13 வர்த்தக மையங்களும் முறையான அனுமதியைப் பெறாமல்
வடிகால்கள் மற்றும் பின்புறச் சாலையை முழுமையாக
ஆக்கிரமித்திருந்ததாக மாநகர் மன்றத்தின் தொடர்பு மற்றும் வர்த்தகப்
பிரிவு கூறியது.

வடிகால்கள் மீது கட்டப்பட்டிருந்த சேமிப்பு கிடங்கு உள்ளிட்ட அனைத்து
கட்டுமானங்களையும் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் உடைத்ததாக
அப்பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சட்டவிரோமாக கட்டுமானங்களை நிறுவியது அல்லது பொது
இடங்களுக்கு இடையூறை ஏற்படுத்தியது தொடர்பில் 1974ஆம் ஆண்டு
வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் 46 மற்றும் 70வது பிரிவின் கீழ்
இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களும் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து
அப்பகுதியில் துப்புரவுப் பணிகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட்
மேனேஜ்மேண்ட் பெர்ஹாட் நிறுவனம் மேற்கொண்டது.


Pengarang :