SELANGOR

பெர்மாத்தாங், உலு பெர்ணம் தொகுதிகளில் வார இறுதியில் இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம்

ஷா ஆலம், மே 26- நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய
சிகிச்சைகளை பெறும் நோக்கில் மாநில அரசினால் நடத்தப்படும்
இரண்டாம் கட்ட சிலாங்கூர் சாரிங் மருத்துவப் பரிசோதனை இயக்கம்
இவ்வார இறுதியில் பெர்மாத்தாங் மற்றும் உலு பெர்ணம் தொகுதிகளில்
நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த
இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்திற்கு குடும்ப
உறுப்பினர்களையும் அழைத்து வரும்படி பொது சுகாதாரத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இந்த இயக்கத்தில் பங்கு கொள்வதன் மூலம் பொதுவான மருத்துவப்
பரிசோதனையோடு இரத்த, சிறுநீர் சோதனை, புற்றுநோய், கண், பல், காது
சோதனை மற்றும் பிஸியோதெராபி சிகிச்சையைப் பெறுவதற்குரிய
வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் என்று அவர் தனது பேஸ்புக் பதிவின்
வாயிலாக கேட்டுக் கொண்டார்.

பெர்மாத்தாங் தொகுதி நிலையிலான மருத்துவப் பரிசோதனை இயக்கம்
வரும் சனிக்கிழமை கம்போங் குலோங் குலோங் மண்டபத்திலும் உலு
பெர்ணம் தொகுதி நிலையிலான பரிசோதனை இயக்கம் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் நடைபெறும் என்று அவர்
குறிப்பிட்டார்.

இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கம் தொடர்பிலான மேல்
விபரங்களை 1-800-22-6600 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில்
செல்கேர் அமைப்பு அல்லது https://selangorsaring.selangkah.my/ என்ற அகப்பக்கம்
வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

நோய்ப் பின்னணி உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உடல்
பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக்   கடைபிடித்தவர்களை இலக்காக கொண்டு இந்த சிலாங்கூர் சாரிங்
திட்டத்தை மாநில அரசு 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் அனைத்து
தொகுதிகளிலும் நடத்தியது.


Pengarang :