NATIONAL

முதல் வீட்டிற்கான முத்திரை வரி விலக்களிப்பு மக்கள் சொந்த வீடு பெறுவதை ஊக்குவிக்கும்- மந்திரி புசார்

கோம்பாக், ஜூன் 12- முதல் வீடு வாங்குவோருக்கு முத்திரை வரி
செலுத்துவதிலிருந்து விலக்களிக்கும் திட்டத்தைத் தொடர மத்திய அரசு
முடிவெடுத்துள்ளது. இது சொந்த வீட்டைப் பெறும் மக்களின்
விருப்பத்திற்கு ஊக்குவிப்பாக அமையும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

மத்திய அரசின் இந்த திட்டம் நாட்டில் குறிப்பாகச் சிலாங்கூரில் முதல்
வீட்டை அல்லது புதிதாக வீட்டை வாங்க விரும்புவோருக்குப் பெரிதும்
உதவியாக இருக்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.

அரசாங்கம் வழங்கிய இந்தச் சலுகை முதல் வீட்டை வாங்குவோருக்குப்
பெரிதும் துணை புரியும். வீடுகளுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான
முத்திரை வரி புதிதாக வீடு வாங்குவோருக்கு நிச்சயம் சுமையை
ஏற்படுத்தும். இந்த வரி விலக்கின் மூலம் அவர்கள் எளிதாக வீடு வாங்க
இயலும் என்றார் அவர்.

இங்குள்ள அனைத்துலக இஸ்லாமிய பல்க்லைக்கழகத்தில் சிலாங்கூர்
மாநில நிலையிலான 2023 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் தினக்
கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைத் தெரிவித்தார்.

மக்கள் சொந்த வீட்டைப் பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் முதல்
வீட்டிற்கு முத்திரை வரியைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கும் திட்டம்
தொடரப்படும் என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி தொடங்கி 2023 டிசம்பர் 31ஆம்
தேதி வரையிலான காலக்கட்டத்தில் செய்யப்பட்ட விற்பனைக்
கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு இந்த வரி விலக்கு சலுகை பொருந்தும்
என்று நிதியமைச்சு அண்மையில் கூறியிருந்தது.


Pengarang :