NATIONAL

இணைய மோசடிக் கும்பலிடம் வாழ்நாள் சேமிப்பான 12 லட்சம் வெள்ளியை இழந்தார் குடும்ப மாது

கூச்சிங், ஜூன் 12- சட்டவிரோதப் பணப் பரிமாற்ற நடவடிக்கையில்
ஈடுபட்டதாகத் தொலைபேசி வழி அடையாளம் தெரியாத நபர் விடுத்த மிரட்டலால் மிரண்டு போன குடும்ப மாது தனது வாழ்நாள் சேமிப்பான 11 லட்சத்து 18 ஆயிரம் வெள்ளியை இழந்தார்.

பிந்துலுவில் உள்ள நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறையில்
பணியாற்றி வரும் அந்த 55 வயது மாது தான் இந்த இணைய மோசடிக்குப்
பலியானவர் என்று சரவாக் மாநிலப் போலீஸ் ஆணையர் டத்தோ முகமது
அஸ்மான் அகமது சப்ரி கூறினார்.

கடந்த மே மாதம் 22ஆம் தேதி புத்ராஜெயாவிலிருந்து அந்த மாதுவைத்
தொலைபேசி வழி தொடர்பு கொண்ட ஆடவர் ஒருவர் சுகாதார அமைச்சை
ஏமாற்றுவதற்காகக் கோத்தா கினபாலுவில் தொலைபேசி எண்ணை பதிவு
செய்துள்ளீர்கள் என குற்றஞ்சாட்டியதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் சார்ஜன் வோங் மற்றும் இன்ஸ்பெக்டர் கூ என கூறப்படும்
இருவருக்குத் தொலைபேசி இணைப்பு மாற்றப்பட்டதாகவும் சட்டவிரோதப்
பணப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அம்மாதுவை
அவ்விருவரும் குற்றஞ்சாட்டியதாகவும் அவர் சொன்னார்.

உங்களிடம் உள்ள பணத்தை பேங்க் நெகாரா சோதிக்க விரும்புகிறது.
ஆகவே, விசாரணையின் ஒரு பகுதியாக உங்கள் பெயரில் புதிய வங்கிக்
கணக்கை திறந்து அந்த வங்கிக் கணக்கிற்கு உங்கள் சேமிப்பு
அனைத்தையும் மாற்றி விடுங்கள் என அவர்கள் அம்மாதுவுக்கு
உத்தரவிட்டுள்ளனர் என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மே 23 முதல் ஜூன் 9 வரையிலான
காலக்கட்டத்தில் ஊழியர் சேம நிதியிலிருந்த 881,000 வெள்ளி மற்றும்
சேமிப்பிலிருந்த 300,000 வெள்ளியை அம்மாது புதிதாகத் திறந்த தனது
வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார்.

அதிகப்படியான பணம் மீட்கப்பட்டது தொடர்பில் வங்கித்
தரப்பினரிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை
உணர்ந்த அம்மாது இவ்விவகாரம் தொடர்பில் போலீசில் புகார் அளித்தார்
என்று அவர் சொன்னார்.


Pengarang :