NATIONAL

மாரானில் இரு கும்பல்கள் மோதல் – ஒன்பது ஆடவர்கள் கைது

குவாந்தான், ஜூன் 12- மாரான், ஸ்ரீ ஜெயாவிலுள்ள கடை ஒன்றின் எதிரே
நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஒன்பது பேரைப் போலீசார் கைது
செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில்
பரவலாகப் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்த இந்த கைகலப்பில் லேசான
காயங்களுக்குள்ளான மூன்று ஆடவர்கள் மாரான் சுகாதார கிளினிக்கில்
வெளிநோயாளிகளாகச் சிகிச்சை  அளிக்கப்பட்டனர் என்று மாரான் மாவட்ட
போலீஸ் தலைவர் டி.எஸ்.பி நோர்ஜம்ரி அப்துல் ரஹ்மான் கூறினார்.

கருத்து வேறுபாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த
கார் ஒன்று வழியை மறிக்கும் வகையில் அதன் பின்னால் ஆடவர்
ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதைத் தொடர்ந்து இரு
தரப்புக்குமிடையே மோதல் உண்டானது தொடக்கக் கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது என அவர் சொன்னார்.

இந்த மோதல் தொடர்பில் 23 முதல் 59 வயது வரையிலான ஒன்பது பேர்
குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் விசாரணைக்காகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் இந்த சம்பவம்
தொடர்பில் ஆருடங்களை வெளியிட வேண்டாம் எனப் பொது மக்களைக்
கேட்டுக் கொண்ட அவர், இந்த கைகலப்பில் சம்பந்தப் பட்டவர்களை
விரைந்து கைது செய்வதற்கு உதவிய பொதுமக்களுக்கும் நன்றி
தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னார்.


Pengarang :