NATIONAL

சாப்டா பெருந்திட்டம் வெ.60 கோடி முதலீட்டை ஈர்க்கும்- 7,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்

ஷா ஆலம், ஜூன் 22- சாப்டா எனப்படும் சபாக் பெர்ணம் மேம்பாட்டுப்
பகுதி திட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பெரிய அளவிலான இரு
மீன்பிடித் திட்டங்கள் வாயிலாக 60 கோடி வெள்ளி மதிப்பிலான
முதலீடுகளை ஈர்க்க முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த
உயர்திறன் கொண்ட இத்திட்டத்தின் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் இந்த
மாவட்டத்தில் 7,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று
அவர் கூறினார்.

உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்வதற்குரிய உணவு உத்தரவாத இலக்கை
அடைவதை நோக்கமாகக் கொண்ட  வேளாண் மேம்பாட்டுத் திட்டம் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ் மலேசியாவின் முதலாவது துனா மீன் மற்றும் இதர
வகை மீன்களை பதனிடும் மற்றும் பொட்டலமிடும் தொழிற்சாலை சுங்கை
லாங் பகுதியில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது தவிர இந்திய பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் அணைவதற்கு
ஏதுவாக துறைமுகம், மீன் மற்றும் நண்டு வளர்ப்பு பண்ணை
போன்றவையும் இங்கு நிர்மாணிக்கப்படும் என்று அவர் மேலும்
சொன்னார்.

உயர் மதிப்பு கொண்ட மேம்பாட்டுத் திட்டத்தை உள்ளடக்கிய இந்த சாப்டா
திட்டம் 1,317 ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த
திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 24.8 கோடி வெள்ளி வரை வருமானம் ஈட்ட
முடியும் என மதிப்பிடப்படுகிறது.


Pengarang :