NATIONAL

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவிற்கு 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 22 – மலேசியா இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஆசியான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது தேசிய சுற்றுலாத் துறையின் சாதகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால், மலேசியா இவ்வாண்டு 16.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை எட்டும் என்று அமைச்சகம் நம்பிக்கை கொண்டுள்ளது. இதன் மூலம் RM49 பில்லியனுக்கும் அதிகமாக சுற்றுலா வருவாய் எதிர்பார்க்கப் படுகிறது என துணை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான் கூறினார்.

“கோவிட்-19 இலிருந்து பெரும்பாலான நாடுகளை சேர்ந்தவர்கள்  மீண்டு வருவதன் மூலம் சீனாவின் சமீபத்திய எல்லை திறப்பு உட்பட பல நாடுகளின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

சுற்றுலா மலேசியாவின் ஒத்துழைப்பின் மூலம், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் தேர்வாக மலேசியா தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்ய அதிக திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆசியான் நாடுகளைத் தவிர, மத்திய கிழக்கு, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளின் கவனத்தையும் மலேசியா ஈர்த்துள்ளது என மோதேக் மற்றும் சுற்றுலா மலேசியா அடையாளம் கண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

சபா, சரவாக் மற்றும் பிற மாநிலங்களின் இயற்கை வளம் மற்றும் அழகு தற்போது சீனா, தைவான் மற்றும் கொரியாவிலிருந்து வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை கவனத்தைக் ஈர்த்துள்ளது என்றார்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர், சீன சுற்றுலாப் பயணிகள் சபாவிற்கு முக்கிய சுற்றுலா பயணிகளாக இருந்தனர்; 2019 இல் 598,566 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

– பெர்னாமா


Pengarang :