SELANGOR

கோல லங்காட்டில் சோளப் பயிரீட்டுத் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும்

ஷா ஆலம், ஜூன் 23- கோல லங்காட் செலாத்தான், சுங்கை கெலாம்பு
பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் தானிய சோளத்தைப் பயிடும் திட்டத்தை
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) அடுத்த
மாதம் தொடங்கி கட்டங் கட்டமாக மேற்கொள்ளும்.

உணவு பாதுகாப்பு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக விளங்கும் இத்திட்டம்
வெள்ளம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகளால் சிறிது காலம்
தடைபட்டிருந்ததாக பி.கே.பி.எஸ். தலைமைச் செயல்முறை அதிகாரி
டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

சுங்கை கெலாம்பு தவிர்த்து பெஸ்தாரி ஜெயாவிலும் இத்தகைய சோளப்
பயிரீட்டுத் திட்டத்தை பி.கே.பி.எஸ். அமல்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர்,
சிலாங்கூர் ஃப்ரூட் வேலிக்கு அருகாமையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில்
அடுத்தாண்டு இத்திட்டம் தொடங்கப்படும் என்றார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாசில் 300 ஏக்கரில் மேற்கொள்ளத்
திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டம் தீர்க்கப்படாமலிருக்கும் சில தொழில்
நுட்ப பிரச்சனைகளால் இன்னும் தொடங்கப்படாமலிருப்பதாக அவர்
தெரிவித்தார்.

தானிய சோளப் பயிரீட்டுத் திட்டத்தை மேற்கொள்வதற்காகச் சிலாங்கூர்
மாநில அரசு பி.கே.பி.எஸ். வாயிலாக நெகிரி செம்பிலான் மாநில அரசுடன்
கடந்தாண்டு மே மாதம் 18ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.

கோல லங்காட் மற்றும் நெகிரி செம்பிலானில் சுமார் 30 லட்சம் வெள்ளி
முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த சோளப் பயிரீட்டுத் திட்டத்தின்
வாயிலாகச் சிலாங்கூரில் கோழி மற்றும் கால்நடைகளுக்கான
தீவினத்திற்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்க இயலும் என
எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :