எண்ணெய் கசிவு உருவகப்படுத்துதல் திட்டத்தின் மூலம் நீர்வள மாசுபாட்டைக் கையாளப் பயிற்சி

ஷா ஆலம், ஜூன் 26; சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) எண்ணெய் கசிவு உருவகப்படுத்துதல் திட்டத்தை செயல்படுத்தி அதன் ஊழியர்களுக்கு நீர்வள மாசுபாட்டின் முக்கியமான சூழ்நிலைகளை கையாள பயிற்சி அளித்தது.

இந்த உருவகப்படுத்துதலானது, பெஸ்டாரி ஜெயாவின் ஹாங் துவா குளத்தில் நடைபெற்ற நடைமுறைப் பயிற்சி உட்பட பல தொகுதிகளை உள்ளடக்கியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இப்பயிற்சியில் எண்ணெய் கசிவு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மாசுபாடு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நீர் ஆதார மாசுபாட்டின் வகை மற்றும் அதற்கான காரணம் ஆகியவை அடங்கும்.

“இந்தப் பயிற்சியின் மூலம் எண்ணெய் கசிவு மாசு சம்பவங்களைக் கையாளும் போது ஊழியர்களின் பொருத்தமான முறைகள் மற்றும் நுட்பங்களைப் பற்றிய அறிவை மேம்படுத்த முடியும்,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

அடிக்கடி நிகழும் மாசுபாட்டிற்கான காரணங்களையும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் கண்டறிய ஊழியர்களின் புரிதலை மேம்படுத்த இந்த திட்டம் உதவுகிறது என லுவாஸ் தெரிவித்தது.

“இந்தப் பயிற்சியில் 25 பேர் பங்கேற்ற வேளையில் நீர் கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த (KBA) லுவாஸ் ஊழியர்களால் நடத்தப்பட்டது,” என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நீர் ஆதாரம் ஆபத்தில் இல்லை மற்றும் மாசுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும் ஆற்றின் மேல் மற்றும் நீரோடை  கீழ் பகுதிகளில் மாதிரிகள் எடுக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிறுவனம் மாநிலத்தின் முக்கிய நதிகளான லங்காட் நதி, சிலாங்கூர் நதி மற்றும் கிள்ளான் நதி ஆகியவற்றிலும் ரோந்து மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :