SELANGOR

முன்னாள் போதைப் பித்தர்கள் வருமானம் ஈட்டுவதற்கு உதவ மாநில அரசு- ஏ.ஏ.டி.கே. நடவடிக்கை

ஷா ஆலம், ஜூலை 3- முன்னாள் போதைப் பித்தர்கள் வர்த்தகத்தில்
ஈடுபடுவதன் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு உதவ
மாநில அரசு தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுனத்துடன் (ஏ.ஏ.டி.கே.)
ஒத்துழைப்பு நல்கும்.

முன்னாள் போதைப் பித்தர்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு நாம்
ஆதரவளிக்க வேண்டுமே தவிர சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கி
வைக்கக் கூடாது என்று தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இதன் தொடர்பில் பெட்டாலிங் மாவட்ட ஏ.ஏ.டி.கே.வுடன் இம்மாத
இறுதியில் ஒத்துழைப்பு நல்கவிருக்கிறோம். பின்னர் இத்திட்டம் இதர
மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டம் முன்னாள் போதைப் பித்தர்களுக்கான தொழில் முனைவோர்
வழிகாட்டலை பிரதான இலக்காகக் கொண்டிருக்கும். அத்தரப்பினர்
சுயமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட பல்வேறு
நிறுவனங்களுடன் நாங்கள் ஒத்துழைக்கவிருக்கிறோம் என்றார் அவர்.

இதற்கு முன்னர் நாங்கள் இத்தரப்பினர் சொந்தமாக விவசாயத்தில்
ஈடுபடுவதற்காக சமூக வேளாண் திட்டத்தை அமல்படுத்தினோம்.
தோட்டத்தில் உற்பத்தியாகும் பொருள்களை விற்று அவர்கள் வருமானம்
ஈட்டுவதை அத்திட்டம் நோக்கமாக கொண்டிருந்தது என்று அவர்
சொன்னார்.

இங்குள்ள செக்சன் 4, சூராவ், ரவுடா அல்-முத்தாகினில் நடைபெற்ற
ஹஜ்ஜூப் பெருநாள் உபசரிப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, முன்னாள் போதைப் பித்தர்களுக்கு உதவுவதற்காக மாநில
அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தாங்கள் பெரிதும் வரவேற்பதாகப் பெட்டாலிங் மாவட்ட ஏ.ஏ.டி.கே. பிரிவு தலைவர் ஷியாம்சுல் அஸ்லி ஜமாலுடின் கூறினார்.


Pengarang :