SELANGOR

சிலாங்கூரில் குடிநீர்க் கட்டண உயர்வு இல்லை- மந்திரி புசார் உறுதி

ஷா ஆலம்,  ஜூலை 5-  சிலாங்கூரில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை. மக்களுக்கு மேலும் சுமை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி புசார் ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

குடிநீர் கட்டணம் என்பது கொள்கை ரீதியான ஒரு விவகாரமாகும்.  இதன் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவும் ஒப்புதலும் தேவைப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில்  இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் சொன்னார்.

மக்கள் எதிர் நோக்கும் பொருளாதாரச் சுமையை குறைப்பதில் உதவுவதுதான் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமே தவிர அவர்களுக்கு சுமையை ஏற்படுத்துவது அல்ல என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் உள்ள 84 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு முறையாக நீரை விநியோகம் செய்வதை உறுதி செய்வதற்குரிய கடப்பாட்டை மாநில அரசு கொண்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

நீர் விநியோக நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவை சமநிலைப் படுத்துவதற்கு ஏதுவாக கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இவ்வாண்டில் நீர் கட்டணம் உயர்வதற்கான சாத்தியம் உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமிருடின் இவ்வாறு கருத்துரைத்தார்.

குடியிருப்புகளுக்கான குடிநீர் கட்டணம் முதல் 20 கன மீட்டருக்கு 57 காசாகவும், அடுத்த 15 கன மீட்டருக்கு ஒரு வெள்ளி 3 காசாகவும், 35 கன மீட்டருக்கு மேல் இரண்டு வெள்ளியாகவும் தற்போது கட்டணம் என நிர்ணயிக்கப்படுகிறது.


Pengarang :