SELANGOR

தங்குமிட நடத்துநர்களின் வருமானத்தைப் பெருக்க உதவும் சிகிஞ்சான் முனையம்

ஷா ஆலம், ஜூலை 11- பாரிட் 5, நெல்வயல்களுக்கு மத்தியில்
பிருமாண்ட விமானம் ஒன்றை தாங்கி நிற்கும் சிகிஞ்சான் முனையம்
ஹோம் ஸ்தேய் எனப்படும் தங்குமிட நடத்துநர்கள் மற்றும் வணிகர்கள்
கூடுதல் வருமானம் ஈட்டுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது.

அந்த புதிய சுற்றுலா ஈர்ப்பு மையம் வட்டார பொருளாதாரத்தை
உயர்த்துவதற்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித்
தருவதற்கும் பெரிதும் துணை புரியும் என்று சிகிஞ்சான் தொகுதியின்
நடப்பு உறுப்பினரான இங் சுயி லிம் கூறினார்.

போயிங் 727 ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த முனையம்
பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து
ஆயிரக்கணக்கான பொது மக்கள் குறிப்பாகப் பொது விடுமுறை மற்றும்
வார இறுதி நாட்களில் அங்கு கூடுவதாக அவர் சொன்னார்.

சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிகிஞ்சான் தற்போது துரித வளர்ச்சி
கண்டு வருகிறது. விவசாயம் மற்றும் மீன் பிடித்தொழிலில் மட்டுமின்றி
சுற்றுலாத் துறையிலும் அது பிரசித்தி பெற்று வருகிறது என்றார் அவர்.

தற்போது இந்த இடம் சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபலமடைந்து
வருகிறது. சிகிஞ்சானுக்கு சுற்றுலா மேற்கொள்ள மக்கள் ஆர்வம்
காட்டுவதோடு இங்குள்ள தங்கும் விடுதிகளில் இரவுப் பொழுதைக்
கழிக்கவும் அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த முனையம் தொடர்ந்து மேம்படுத்தப்படும் எனக் கூறிய அவர்,
அதிகமான வாடிக்கையாளர்கள் அமரும் வகையில் நிரந்தரமாக
உணவகமும் இங்கு நிறுவப்படும் என்றார்.

இந்த முனையத்தின் மேம்பாட்டுப் பணிகள் இன்னும் முற்றுப்
பெறவில்லை. இதனை விரிவான அளவில் மேம்படுத்த விரும்புகிறோம்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் சுற்றுலாத் துறைக்குப் புத்துயிரூட்டுவதவற்கான திட்டங்களில் ஒன்றாக இது விளங்குகிறது என
அவர் மேலும் தெரிவித்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட இந்த விமானம்
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தரை மார்க்கமாக இங்கு கொண்டு வரப்பட்ட
போது அதனைக் காண பொதுமக்கள் திரண்டதோடு அக்காட்சியைப் பதிவு
செய்து சமூக ஊடங்களிலும் பதிவேற்றினர்.


Pengarang :