SELANGOR

செந்தோசா தொகுதியில் வெ.350,000 செலவில் பள்ளி சீரமைப்பு மற்றும் கல்வித் திட்டங்கள் அமல்

ஷா ஆலம், ஜூலை 12- செந்தோசா தொகுதியிலுள்ள பள்ளிகளில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு சுமார் 200,000 வெள்ளியை
தொகுதி சேவை மையம் செலவிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் வாயிலாக இத்தொகுதியில் உள்ள சமயப் பள்ளிகள்
உள்பட 18 பள்ளிகள் பயன் பெற்றதாகச் செந்தோசா தொகுதியின் நடப்பு
உறுப்பினரான டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.

இது தவிர, கல்வி சார்ந்த திட்டங்களை மேற்கொள்வதற்கும் பள்ளிகளுக்கு
மானியமாக வழங்குவதற்கும் மேலும் 150,000 வெள்ளி செலவிடப்பட்டது
என்று அவர் சொன்னார்.

இத்தகைய திட்டங்களின் வாயிலாக திடல், நடைபாதை, கூரைகள் மற்றும்
மண்டபம் சீரமைக்கப்பட்டு பள்ளிகள் புதுப்பொலிவைப் பெறுவதற்குரிய
வாய்ப்பு கிட்டியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

செந்தோசா தொகுதியிலுள்ள மாணவர்கள் கல்வியை பாதியில்
கைவிடாலிருப்பதை உறுதி செய்வதற்காக கல்வித் திட்டங்கள் மீது
தாங்கள் அதிக முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

இந்நோக்கத்தின் அடிப்படையில் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள 7
முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு எழுதுவதற்கும்
வாசிப்பதற்கும் உதவக்கூடிய சிறப்புத் திட்டத்தை இத்தொகுதி
வெற்றிகரமாக அமல்படுத்தியது என்றும் குணராஜ் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்
பயன்பெற்றுள்ளனர். அவர்கள் இப்போது பிறரின் துணையின்றி எழுதவும்
வாசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

அது மட்டுமின்றி எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு
வழிகாட்டிப் பயிற்சிகள் தொகுதி சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும்
அவர் குறிப்பிட்டார்.


Pengarang :