SELANGOR

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தங்கும் விடுதியில் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஆக.15 க்குள் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூலை 12- இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் தங்கள்  பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்  வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இந்த விண்ணப்ப பாரங்கள் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் விநியோகிக்கப்படுவது மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளில் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கே.உதயசூரியன் கூறினார்.

இந்த தங்கும் விடுதி தொடர்பில் மேல் விபரங்களைப் பெற விரும்பும் பெற்றோர்கள் 016-3327590 என்ற எண்களில் மூர்த்தி மற்றும் 019-2825191 என்ற எண்களில் குணசேகரன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த தங்கும் விடுதியில் தங்கி கல்வி பயில்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தங்கும் விடுதியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதியாகும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விரைந்து விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இந்த விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே இங்கு தங்கி படிப்பதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

தொடக்க கட்டமாக 4 மற்றும் 5 ஆம் ஆண்டில் பயிலும் 25 ஆண் மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். மாநில அரசிடம் இருந்து அடுத்த கட்ட நிதியுதவி கிடைத்தவுடன் மாணவர் எண்ணிக்கை கட்டங் கட்டமாக உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுடன் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வறுமை, வசதி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்கள் முறையான கல்வியைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் மாணவர் விடுதி இத்திட்டத்தை நாங்கள் தொடக்கியுள்ளோம்.

இந்த மாணவர் விடுதியை 300,000 வெள்ளி மானியத்துடன் செயல்படுத்துவதற்குரிய வாய்ப்பை வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் மத்திய அரசு மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்தியப் பிரதி நிதியிடமும் இந்த விடுதிக்கு தேவையான நிதியுதவி பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :