SELANGOR

சிலாங்கூர் சுல்தான் அவமதிப்பு – கெடா மந்திரி புசாருக்கு எதிராக ஷா ஆலம் கெஅடிலான் போலீசில் புகார்

ஷா ஆலம், ஜூலை 13- தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மேன்மை தங்கிய
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசிய கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக ஷா ஆலம்
கெஅடிலான் போலீசில் புகார் செய்துள்ளது.

சிலாங்கூர் அரச அமைப்பின் இறையாண்மையைப் பாதுகாக்கும்
வகையிலும் இவ்விவகாரம் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் மூலதனமாக
பயன்படுத்தப்படாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த புகாரை
தாங்கள் செய்துள்ளதாக ஷா ஆலம் கெஅடிலான் தகவல் பிரிவுத்
தலைவர் சூர்யாமுய்ஸூடின் கமாருடின் கூறினார்.

அரச அமைப்பை ஏளனப்படுத்துவதற்குரிய மேடையாக அரசியல் பிரசாரக்
கூட்டங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதால் தங்களின் புகாரின்
அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சனுசியின் அந்த உரை சிலாங்கூர் சுல்தானை வெளிப்படையாக
அவமதிக்கும் வகையில் உள்ளது. மாநில அரச அமைப்பின் மீது
பற்றுதலும் மதிப்பு கொண்டிருக்கும் சிலாங்கூர் மக்களால் இதனை
ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இனவாத ரீதியிலான அறிக்கைகள் மூலம் சனுசி சமூகத்தில்
பிரிவினையை உண்டாக்கி வருவதாக இங்குள்ள செக்சன் 9, போலீஸ்
நிலையத்தில் புகார் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அரசியல் சுயநலத்திற்காக 3ஆர் (இனம், சமயம், மற்றும் அரச அமைப்பு)
பயன்படுத்தப்படுவதை தடுப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள
நிலைப்பாட்டை கெஅடிலான் கட்சி முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.

செலாயாங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல்
பிரசாரக் கூட்டத்தில் பேசிய சனுசி, சிலாங்கூர் மந்திரி புசாராக
டத்தோஸ்ரீ அமிருடினை நியமித்தது தொடர்பில் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களை அவமதிக்கும் வகையிலான
கருத்துகளை வெளியிட்டார்.


Pengarang :