SELANGOR

பொது வசதிகளை மேம்படுத்த பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு வெ.14.5 லட்சம் நிதியுதவி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18- பொது வசதிகளை மேம்படுத்துவதற்காகப்
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு ஊராட்சி மன்ற மேம்பாட்டு
அமைச்சு 14 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியின் மூலம் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட
பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அதன்
அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

தாமான் ரிம்பா ரியாங்கில் உள்ள பொது கழிப்பறையை 350,000 வெள்ளி
செலவில் தரம் உயர்த்துவது, எம்.பி.பி.ஜே. சமூக மண்டபத்தின் கூரையை
550,000 வெள்ளி செலவில் புதுப்பிப்பது, கெராய் செலேரா இம்பியான்
உணவகப் பகுதியை 550,000 வெள்ளி செலவில் சீரமைப்பது ஆகிய பணிகள்
இந்நிதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மூன்று இடங்களும் பொழுதை போக்குவதற்கும்
உணவுவருந்துவதற்கும் அதிகமானோர் ஒன்று கூடும் மையமாக
விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்களுக்கான மானியம் அங்கீகரிக்கப்ட்டு விட்டதோடு சீரமைப்பு
பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இவ்வாண்டு இறுதிக்குள் முற்றுப்
பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் மேலும் சொன்னார்.

கோத்தா டாமன்சாரா மக்கள் குடியிருப்பில் மாற்று லிப்ட் திட்டத்தை
தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநில வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலும் கலந்து கொண்டார்.


Pengarang :