NATIONAL

830 கோடி வெள்ளி பெல்டா கடன் ரத்து- ஆதாரத்தைக் காட்டத் தயார்- அன்வார்

கோல சிலாங்கூர், ஜூலை 20-  கூட்டரசு நில மேம்பாட்டு  வாரியத்தின் கடனை தாம் ரத்து செய்ததற்கான ஆதாரத்தை காட்ட தாம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.

ஆதாரத்தைக் காட்டுவதற்கு டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் வழங்கிய 24 மணி நேர அவகாசம் தேவையில்லை. பன்னிரண்டு மணி நேரத்தில் அதற்கான ஆதாரத்தை நான் காட்டுகிறேன் என்று அன்வார் கூறினார்.

ஆதாரத்தைக் காட்ட என்னால் முடியும். எனக்கு 24 மணி நேர அவகாசம் தேவையில்லை. 12 மணி நேரம் போதுமானது. அவர் (மொகிதீன்) வேலையை முறையாக செய்யவில்லை. அதனால்தான் கடந்த ஜூன் 27ஆம் தேதி  நான் கையெழுத்திட்டேன் என்றார் அவர்.

நீங்கள் எனக்கு சவால் விடுத்தீர்கள். நான் ஆதாரத்தை காட்டுகிறேன். அதன் பின்னர் அவர் என்னிடம் மன்னிப்புக் கோர வேண்டும். கடந்த ஜூன் 27ஆம் தேதி கையெழுத்திட்டதாக  ஞாபகம்.  99 கோடி வெள்ளிக்கான நான்கு ஒப்பந்தங்கள் அவை என அவர் மேலும் சொன்னார்.

தஞ்சோங் காராங், கம்போங் ராஜா மூசாவில் நேற்றிரவு நடைபெற்ற ஒற்றுமை மால் ஹிஜ்ரா கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இன்று வியட்நாம் நாட்டிற்கு தாம் அதிகாரப்பூர் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இந்த ஆவணங்களை ஒப்படைக்கும்படி கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் முகமது மரைக்கானை தாம் கேட்டுக் கொண்டதாகவும் அன்வார் சொன்னார்.

இதுதான் அரசியல்வாதிகளின் இயல்பு. பொய் என்று குற்றஞ்சாட்டுவது, பின்னர் ஆதாரம் கேட்பது.  இன்று நான் வியட்நாம் செல்கிறேன். அந்த ஆவணங்களை மொகிடினிடம் ஒப்படைக்கும் படியும் அவரை பகிரங்கமாக மன்னிப்பு கோரும் படியும் பணிக்கும்படி கருவூலத் தலைமைச் செயலாளரிடம் நான் தெரிவித்துள்ளேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :