SELANGOR

பெரிக்கத்தானுக்கு வாக்களிப்பது அம்னோ தடை செய்யப் படுவதை ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பானது- அம்னோ தலைவர் கூறுகிறார்

உலு கிளாங், ஜூலை 20- அம்னோவைக் கலைப்பதற்கு தீட்டப்பட்ட திட்டம் அம்பலமாகி விட்டதால் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெரிக்கத்தான் கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.

பெரிக்கத்தானுக்கு வாக்களிப்பது கடந்த 1946 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அம்னோ கட்சியை தடை செய்ய அக்கூட்டணி செய்த சதியை ஆதரிப்பதாக பொருள்படும் என்று சிலாங்கூர் மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ மெகாட் ஜூல்கர்னாய்ன் ஓமார்டின் கூறினார்.

அம்னோவை கலைக்கத்தான் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினும் விரும்பினார்களே தவிர தடை செய்ய அல்ல என்ற சிலாங்கூர் மாநில அம்னோவின் முன்னாள் தொடர்பு குழுத் தலைவர் டான்ஸ்ரீ நோ ஓமாரின் கருத்து குறித்தும் அவர் கேள்வியெழுப்பினார்.

நேற்று முன்தினம் நிகழ்வொன்றில் பேசிய நோ ஓமார்,  துன் மகாதீர் அம்னோவை தடை செய்ய விரும்பவில்லை. மாறாக, கலைக்க விரும்பினார் என கூறியுள்ளார். அம்னோவை கலைப்பதற்கு தடை செய்தவதற்கும் பெரிதாக என்ன வேறுபாடு உள்ளது? என அவர் கேள்வி எழுப்பினார்.

அம்னோ வாக்காளர்களுக்கு நான் மறுபடியும் நினைவூட்ட விரும்புகிறேன். ஏமாந்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் எதிர்காலத்தில் அம்மாவை தடை செய்வதற்கு நாம் வழங்கும் அனுமதி ஆகிவிடும் என்றார் அவர்.

உண்மையில் நீங்கள் கட்சியை  நேசிப்பவராக இருந்தால் பெரிக்கத்தானுக்கு வாக்களிக்காதீர்கள் என்று நேற்று இங்கு உலு கிளாங் தொகுதியின் தேர்தல் இயந்திரம் மற்றும் நடவடிக்கை அறையின் தொடக்க நிகழ்வி உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :