SELANGOR

ரஹ்மா மலிவு விற்பனை ஆகஸ்டு 1 தேதி தொடங்கி 12 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

கிள்ளான், ஜூலை 21- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏசான் ரஹ்மா மலிவு
விற்பனை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் முதல் தேதி தொடங்கி மாநிலத்தின் 12
இடங்களில் நடத்தப்படும். தற்போது அந்த விற்பனை ஒன்பது இடங்களில்
மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.

பொது மக்கள் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர்
எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும்
நோக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்
என்று பி.கே.பி.எஸ். குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி
முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

பொருள் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைப்பதிலும் இந்த
மலிவு விற்பனைத் திட்ட விரிவாக்கம் உதவி புரியும். மக்களிடமிருந்து
சாதமான பதில் கிடைத்து சூழ்நிலையும் ஒத்துழைத்தால் விற்பனை
இடங்களின் எண்ணிக்கையை 15ஆகவும் உயர்த்துவோம் என்றார் அவர்.

இது தவிர, பரவலாக கூறப்படும் பொருள்களின் விலை உயர்வின்
தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான இதரத் திட்டங்களையும் நாங்கள்
கொண்டிருக்கிறோம். உண்மையில் பொருள் விலை உயர்வு கண்டுள்ளதா
என்று எங்களுக்குத் தெரியாது. ஆயினும், நாங்கள் எப்போதும் தயாராக
உள்ளதோடு விலைகளைச் சரிபார்த்தும் வருகிறோம் என்று அவர் மேலும்
தெரிவித்தார்.

நேற்று, இங்குள்ள ஜோஹான் செத்தியா பெங்குளு மண்டபத்தில்
நடைபெற்ற ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையின் போது அவர் இதனைக்
கூறினார்.

இந்த ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையை விரிவாக்கம் செய்வதற்கு
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒப்புதல் அளித்து
விட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :