NATIONAL

வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டத்தின் கீழ் 4,321 சிறு தொழில் முனைவோர்களுக்காக RM21.6 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 21: 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டத்தின் கீழ் மொத்தம் 4,321 சிறு தொழில் முனைவோர் RM21.6 மில்லியன் ஒதுக்கீட்டில் வணிகக் கருவிகளைப் பெற்றுள்ளனர்.

மாதம் 3,000 ரிங்கிட்களுக்கும் குறைவாக வருமானம் பெறுபவர்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என சமூகப் பொருளாதார மேம்பாடுத் துறையின் நடப்பு தலைவர் கணபதிராவ் கூறினார்.

“அரசு பணம் விவேகமான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசு எப்போதும் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது.

“மக்களுக்கு உதவுவதில் மாநில அரசு எப்போதும் முன்னணியில் உள்ளது” என்று அவர் முகநூலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வணிக உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் வடிவில் வழங்கும் உதவியின் உச்சவரம்பை RM10,000 ஆக அதிகரித்ததன் மூலம் இத்திட்டம் எப்போதும் மேம்படுத்தப்படுவதாகக் கணபதிராவ் கூறினார்.

நவம்பர் 25 அன்று டத்தோ மந்திரி புசார் தாக்கல் செய்த சிலாங்கூர் 2023 பட்ஜெட்டில் வறுமை ஒழிப்புக்கான புளூபிரிண்ட் உதவித் திட்டத்தைத் தொடர RM2 மில்லியன் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருவிகள் அல்லது இயந்திரங்கள் வடிவில் வழங்கப்படும் உதவி குறிப்பாக வியாபாரிகள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் போன்ற குழுக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :