SELANGOR

எதிர்க்கட்சிகளின் சவால்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்- ஹராப்பான்- பாரிசான் கூட்டணிக்கு நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 24- ஆறு மாநிலங்களில் அடுத்த மாதம்
நடைபெறவிருக்கும் தேர்தலில் காத்திருக்கும் சவால்களை குறைத்து
மதிப்பிட வேண்டாம் என பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான்
நேஷனல் கட்சிகளுக்கு பாரிசான் நேஷனல் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ
முகமது ஹசான் நினைவுறுத்தியுள்ளார்.

தற்போது ஹராப்பான் கூட்டணியின் வசமுள்ள சிலாங்கூர் நெகிரி
செம்பிலான் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களை தேசிய
முன்னணியின் ஆதரவுடன் மீண்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என
அவர்கள் கருதினாலும் வெற்றியை உறுதி செய்ய அனைத்துக் கட்சிகளும்
கடுமையாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை நடப்பு அரசியல் சூழல்
வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு ஆட்டத்திலும் மாறுபட்ட வியூகத்தை கடைபிடிக்கும்
கால்பந்தாட்டத்தை உதாரணம் காட்டிய அவர், அதே மாதிரியான
மாறுபட்ட அணுகு முறை தேர்தல் பிரசாரத்திலும் தேவைப்படுகிறது என்று
தெரிவித்தார்.

கடந்த 15வது பொதுத் தேர்தலில் நமது அணுகுமுறையும் வியூகங்களும்
வேறுபட்டவையாக இருந்தன. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆறு
மாநிலத் தேர்தலில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் வேறுபட்டவையாக
உள்ளதால் நாமும் மாறுபட்ட அணுகு முறையைக் கடைபிடிக்க
வேண்டியுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களைத்
தக்க வைத்துக் கொள்வதில் நமக்கு பிரச்சனை இல்லாதிருக்கலாம்.
ஆனால் கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களை வெற்றி
கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு இருந்தாலும் நாம் கடுமையாக உழைக்க
வேண்டும். இதன் மூலம் குறைந்த பட்சம் தொகுதிகளின்
எண்ணிக்கையையாவது உயர்த்த இயலும என்று அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது ஆரோக்கியமற்ற அரசியல் தர்க்கங்களைத்
தவிர்க்க பிரசாரத்தில் முதிர்ச்சியானப் போக்கை கடைபிடிக்கும்படி
அனைத்து தரப்பினரையும் தற்காப்பு அமைச்சருமான அவர் கேட்டுக்
கொண்டார்.


Pengarang :