SELANGOR

மாநிலத் தேர்தல்- சிலாங்கூரில் 13,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28- மாநிலத் தேர்தல் சுமூகமான முறையில்
நடைபெறுவதை உறுதி செய்வதற்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் தினம்
தொடங்கி ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும் வரை
சிலாங்கூரில் 13,043 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

அவர்களில் 10,843 பேர் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தைச்
சேர்ந்தவர்களாக உள்ள வேளையில் எஞ்சியவர்கள் மற்ற மாநில போலீஸ்
தலைமையகத்திலிருந்து தருவிக்கப்படுவர் என சிலாங்கூர் மாநில
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

பணித் திறனை அதிகரிப்பதற்காக சிலாங்கூர் மாநில காவல் துறை 728
உறுப்பினர்கள் அடங்கிய எட்டு குழுக்களை களத்தில் இறக்கும். நான்கு
பொது ஒழுங்கு கலவர தடுப்பு குழுக்களும் நான்கு மத்திய சேமப்படை
(எப்.ஆர்.யு.) குழுக்களும் இதில் அடங்கும்.

இது தவிர, 104 உறுப்பினர்களை உள்ளடக்கிய மின்னற் படையும்
(எல்.எஸ்.எப்.) தேர்தலில் சமயத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்று
அவர் தெரிவித்தார்.

இங்குள்ள சிவிக் சென்டரில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட மாநிலத்
தேர்தல் தொடர்பான நடைமுறைப் பயிற்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் பெரும் தலைகள் போட்டியிடும் இடங்களின்
அடிப்படையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழக்கூடிய 27
இடங்களையும் குழப்பம் ஏற்படும் என கருதப்படும் 56 இடங்களையும்
தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவற்றில் ஷா ஆலம், கோல லங்காட் அம்பாங், வட கிள்ளான், தென்
கிள்ளான், செர்டாங் சுங்கை பூலோ ஆகி இடங்களும் அடங்கும் என அவர்
குறிப்பிட்டார்.

நாளை நடைபெறவிருக்கும் வேட்பு மனுத்தாக்கலை முன்னிட்டு
மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 37 சாலைகள் நாளை அதிகாலை
6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும்
என்றும் அவர் சொன்னார்.


Pengarang :