SELANGOR

சுங்கை துவா தொகுதியில் வெள்ளப் பிரச்சனைக்கு வெற்றிகரமாகத் தீர்வு கண்டார் அமிருடின்

கோம்பாக், ஜூலை 31- சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினராகப் பதவி
வகித்த காலத்தில் அத்தொகுதியில் நிலவி வந்த வெள்ளப் பிரச்சனைக்குத்
தீர்வு கண்டது டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சாதனைகளில் ஒன்றாக
விளங்குகிறது.

சுங்கை துவா தொகுதியில் குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள
சாலைகளை விரிவு படுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு
வருவதாக கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியின் சட்டமன்ற
உறுப்பினராக இருந்து வரும் அமிருடின் ஷாரி கூறினார்.

உண்மையில், சுங்கை துவா தொகுதியில் 99 விழுக்காடு வெள்ளப்
பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டோம். முன்பு அதாவது 2009 மற்றும்
2010ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு வாரமும் கம்போங் லக்ஸ்மணா
பகுதியில் மார்பளவு வரையிலான வெள்ளத்தை கடந்த செல்ல வேண்டிய
நிர்பந்தம் இருந்தது என்றார் அவர்.

இந்த சாலை முழுவதையும் (ஜாலான் பெஹ்தாரா) கடந்த தவணையின்
போது விரிவுபடுத்தினோம். இவ்வளவு பணிகளைச் செய்த
அரசாங்கத்தையா மாற்றப் போகிறோம்? என அவர் கேள்வியெழுப்பினார்.

தமக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கினால் தொகுதியில்
மேம்பாட்டுப் பணிகளை தொடரும் அதேவேளையில் மக்கள் நலன்
காக்கும் திட்டங்களையும் அமல்படுத்தவுள்ளதாக அமிருடின் சொன்னார்.

நேற்றிரவு சுங்கை துவா தொகுதியில் நடைபெற்ற ஜெலாஜா மடாணி
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக நாம் ஒன்றாக இருந்துள்ளோம். மீண்டும் ஒரு
முறை இந்த தொகுதியில் வெற்றி பெறுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கும்படி
வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :