SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதி தேர்தல் நடவடிக்கை அறை திறப்பு விழா- 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 31- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில்
நேற்றிரவு நடைபெற்ற கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்றத்
தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதான தேர்தல்
நடவடிக்கை அறையின் திறப்பு விழாவில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.

கோத்தா கெமுனிங் தொகுதியின் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான
எஸ். பிரகாஷூக்கு ஆதரவைப் புலப்படுத்தும் வகையில் முதலீடு,
வர்த்தகம் மற்றும் தொழிலியல் துறை துணையமைச்சர் லியு சின் தோங்,
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், செந்தோசா தொகுதி
வேட்பாளர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், சுங்கை காண்டீஸ் வேட்பாளர்
முகமது ஜவாவி அகமது முக்னி, சுபாங் ஜெயா வேட்பாளர் மிஷல் இங்
மற்றும் அம்னோ, அமானா உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து உரையாற்றினர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் வீ.கணபதிராவ். இத்தொகுதியில் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
காண்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை தாம் கடந்த ஐந்தாண்டுகளில்
முன்னெடுத்துள்ளதாக கூறினார்.

ஸ்ரீ மூடா, புக்கிட் லஞ்சோங், புக்கிட் கெமுனிங் ஆகிய பகுதிகளில்
கால்வாய்கள் விரிவாக்குவது பம்ப் ஹவுஸ் எனப்படும் நீர் இறைப்பு
மையங்களை நிறுவுவது, வெள்ள நீர் சேகரிப்பு குளங்களை அமைப்பது
உள்ளிட்டத் திட்டங்களை தாம் அமல்படுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

இது தவிர, புக்கிட் கெமுனிங் சாலையை ஜாலான் கெபுன் சாலை
சுற்றுவட்டம் தொடங்கி 8வது மைல் புக்கிட் கெமுனிங் வரை விரிவுபடுத்துவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கோத்தா கெமுனிங்கில் உள்ள சாலை சுற்றுவட்டத்தில் நிலவும்
கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு
காண்பதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இத்தொகுதியில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தீட்டப்பட்ட திட்டங்களை
தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய கோத்தா கெமுனிங்
வேட்பாளர் பிரகாஜூக்கு வாக்களிக்கும்படி தொகுதி மக்களை அவர்
கேட்டுக் கொண்டார்.

இதனிடையே. இந்நிகழ்வில் உரையாற்றிய குணராஜ், மாநில சிலாங்கூர்
பென்யாயாங் முன்னெடுப்பில் அமல்படுத்தியுள்ள 46 மக்கள் நலத்
திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்படுவதற்கு மாநிலத்தில் பக்கத்தான்
அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம் எனக் கூறினார்.

எதிர்க்கட்சிகள் தங்கள் பிரசாரத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்த
திட்டத்தையும் முன்னிலைப்படுத்தவில்லை. மாறாக, இன மற்றும் சமய
ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் அவை ஈடுபட்டு
வருகின்றன என்றார் அவர்.

இறுதியாக இந்த நிகழ்வில் உரையாற்றிய கோத்தா கெமுனிங் தொகுதி
ஹராப்பான் வேட்பாளரான பிரகாஷ், இத்தொகுதியில் முதன் முறையாக
போட்டியிடும் தமக்கு வாக்காளர்கள் முழு ஆதரவு தரும்படி கேட்டுக்
கொண்டார்.


Pengarang :