ELMEDIA STATEMENTNATIONAL

தவறாது வாக்களியுங்கள்- அரசியல் எதிர்காலம் கருதி சரியான முடிவை எடுங்கள்- வாக்காளர்களுக்கு அன்வார் கோரிக்கை

சிப்பாங், ஆக 2- வரும் 12ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தங்களின் ஜனநாயகக் கடமையை தவறாது நிறைவேற்றும்படி சிலாங்கூர் வாக்காளர்களை பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இத்தேர்தலில் மக்கள் விவேகமான முடிவை எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

தவறாது வாக்களிக்க வேண்டும். விளையாட்டாக கருதாதீர்கள். நீங்கள் ஒரு தவற்றைப் புரிந்தால் கெடா போல் ஆகி விடுவீர்கள். உங்கள் வாக்கை தவறாகப் பயன்படுத்தினால் கிளந்தான் போல் ஆகிவிடுவீர்கள் என்று அவர் சொன்னார்.

அன்வார் செய்வதெல்லாம் சரியானதாக ஆகி விடுமா? கிடையாது. நம்மிடம் பலவீனம் இருந்து  அதனை சரி செய்ய  வேண்டும் என நீங்கள் விரும்பினால் நாங்கள் சரி செய்து கொள்வோம்.ஆனால் வாக்களிக்கும் போது மட்டும் தவறு புரிந்து விடாதீர்கள் என அவர் நினைவுறுத்தினார்.

இந்த தேர்தலில் அவர்களை நாம் நாக்அவுட் செய்ய வேண்டும். இனங்களைப் பற்றியும் மலாய், சீன, இந்தியர்களிடையே சச்சரவு ஏற்படுவதைப் பற்றி அவர்கள் பேசினால் மக்களைக் காக்க வேண்டிய அரசியல் வேண்டும் என நாம் கூறுவோம் என்றார் அவர்.

இங்குள்ள தஞ்சோங் சிப்பாட் காம்ப்ளெக்ஸ் முகிபாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பிரதமருமான அவர் இதனைத் கூறினார்.

நடப்பு அரசாங்கம் வலுவாக இருப்பதோடு நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மை இடங்களையும் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனலுடன் நான் ஒத்துழைப்பது அவ்வளவு எளிதான காரியமா? இல்லை. நாம் தொலைநோக்குப் பார்வையில் இதனை அணுகினோம். அனைத்து இனங்களையும் பாதுகாக்க வேண்டும் என நினைப்பதால் ஓரணியில் திரண்டிருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :