SELANGOR

மாநிலத் தேர்தல் முடிவுகள் மீது விரிவான ஆய்வு- அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தகவல்

கோலாலம்பூர், ஆக 13- ஆறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்
முடிவு மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தொடர்பு மற்றும்
இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

இந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தாங்கள் மதிப்பதாக கூறிய
பக்கத்தான் ஹராப்பான் தகவல் பிரிவுத் தலைவருமான அவர், தேர்தல்
முடிவுகள் தொடர்பில் ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்ட தரப்பினர்
வெளியிட்ட கணிப்புகளோடு அனைத்து அம்சங்கள் மீதும் விரிவான ஆய்வு
மேற்கொள்ளப்படும் என்றார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பான கணிப்புகளையும் கூடுதல் தரவுகளையும்
பல்வேறு ஆய்வுகள் வெளியிட்டிருந்தன. வாக்களிக்க வருவோரின்
எண்ணிக்கை உள்ளிட்ட கணிப்புகளும இந்த ஆய்வின் போது கவனத்தில்
கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேர்தல்
முடிவுகளை அறிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் வாக்குகள் சிதறுவதற்குக் காரணமாக இருந்த
மூடா கட்சியின் தேர்தல் பங்கேற்பு குறித்து கேட்கப்பட்ட போது
அவ்விவகாரம் உண்மையில் வருத்தமளிப்பதாக உள்ளது என்று அவர்
பதிலளித்தார்.

ஒரு தொகுதியில், அதாவது சுங்கை காண்டீஸ்ஸில் இவ்வாறு
நிகழ்ந்திருக்கக் கூடும் என நினைக்கிறேன். இங்கு வாக்குகள் சிதறிய
காரணத்தால் பெரிக்கத்தான் நேஷனல் வெற்றி பெற்றது. இது குறித்து
நான் மேலும் கருத்துரைக்க விரும்பவில்லை என்றார் அவர்.


Pengarang :