SELANGOR

சட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் பிரச்சனைக்குத் தீர்வு காண சிறப்புக் குழு- டுசுன் துவா உறுப்பினர் திட்டம்

ஷா ஆலம், ஆக 17- டுசுன் துவா தொகுதியில் குறிப்பாக கிராமங்களில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காகச் சிறப்புக் குழுவை அமைக்க அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய பிரச்சனைகளை கட்டுப்படுத்தாவிட்டால் ஆறுகள் மாசுபடுவதற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்பதால் இவ்விவகாரத்தில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாக டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ் கூறினார்.

இந்த சிறப்பு பணிக்குழுவை கூடிய விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் மற்றும் உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹம்சான் ஆகியோருடன் நான் விவாதித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமான முறையில் குப்பைக் கொட்டும் பிரச்சனைக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக இதன் தொடர்பில் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என அவர் சொன்னார்.

உலு லங்காட், 18வது மைலில் பொது மக்கள் உணவக நடத்துநர்கள் மற்றும் ஹோம் ஸ்தேய் எனப்படும் தங்கும் விடுதி நடத்துநர்கள் கொட்டியதாக நம்பப்படும் குப்பைக் குவியலையும் அவர் பார்வையிட்டார்.

எலுமிச்சை,டுரியான் தோல்கள் மற்றும் அதிக அளவிலான சோறு இங்கு கொட்டப்பட்டுள்ளது. இது நிச்சயமாக வீடுகளிலிருந்து வந்தவை அல்ல. உணவக நடத்துநர்களே இதற்கு பொறுப்பு என சந்தேகிக்கிறோம் என்றார் அவர்.


Pengarang :