பொது இடங்களில் புகைப்பிடித்த குற்றத்திற்காக வெ.12 லட்சம் அபராதம்

புத்ரா ஜெயா, ஆக 19- பொது இடங்களில் புகைப் பிடித்த குற்றத்திற்காக கடந்த ஜூலை மாதம் 12 லட்சம் வெள்ளி மதிப்பிலான 5,199 சம்மன்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமலாக்க நடவடிக்கை அடைவு நிலை மற்றும் பொது சுகாதார சட்டங்களின் கீழ் 21,429 வணிக வளாகங்கள் சோதனையிடப்பட்டு 9,837 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

2004ஆம் ஆண்டு புகையிலை உற்பத்தி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது  என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

டிங்கி காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக 1975ஆம் ஆண்டு நோய்களைப் பரப்பும் பூச்சிகள் அழிப்பு சட்ட அமலாக்கத்தின் வாயிலாக  சராசரி 500 வெள்ளி அபராதம் வீதம் 13 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 2,644 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில்  249 குற்றச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட வேளையில் அவற்றில் 36 சம்பவங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 171,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்த மாதம் நாடு முழுவதும் 6,832 உணவகங்கள் மீது சோதனை நடத்தப்பட்ட வேளையில் அவற்றில் 226 அல்லது 3.31 விழுக்காட்டு உணவகங்களை 1983ஆம ஆண்டு உணவுச் சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார் அவர். 


Pengarang :