வேங் சான் புதிய சபாநாயகரா? இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் மந்திரி புசார்

ஷா ஆலம், ஆக 23 – மாநில சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கான  வேட்பாளர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சமீபத்திய மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனலுக்கு  தனது டுசுன் துவா தொகுதியை ஜசெக விட்டுக் கொடுத்ததற்கு ஈடாக பந்திங் தொகுதி முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சானுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று அக்கட்சி நிபந்தனை விடுத்திருந்த நிலையில் மந்திரி புசார் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமிருடின், லாவ் வேங் சானின் பெயரை ஜசெக முன்மொழிந்துள்ள போதிலும்  

மலேசியா தினத்திற்குப் பிறகு நடைபெறும்  சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத்தின் போது சபாநாயகரின் நியமனம் குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

இந்த நடைமுறை முறையான மற்றும் விவேகமான முறையில் மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர்,  இந்த விவகாரம் தொடர்பில் ஆரம்ப கட்ட விவாதங்கள் ஏற்கனவே நடந்துள்ளன என்றார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த பதவிக்கான நியமனத்திற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தும் அரசாங்க  உயர் மட்டத் தலைமையிலிருந்து ஒப்புதலும் தேவைப்படுகிறது என்றார் அவர்.

முன்னதாக ஜூலை 23ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஜசெக தலைமைச் செயலாளர்  அந்தோணி லோக் ,  தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் அடுத்த சிலாங்கூர் சபாநாயகராக லாவை நியமிக்க  தமது கட்சி பரிந்துரைத்துப்ளதாக கூறியிருந்தார். 


Pengarang :