ஆட்சிக்குழு உறுப்பினர்களின் துறைகள் அறிவிப்பு- ஐந்து துறைகளுக்கு அமிருடின் பொறுப்பேற்றார்

ஷா ஆலம், ஆக 23- மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் துறைகளை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்தார். அவற்றில் ஐந்து முக்கியத் துறைகளை அவர் தன் வசம் வைத்திருக்கிறார்.

நிலம் மற்றும் இயற்கை வள மேம்பாடு, நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கை, இலக்கவியல் மற்றும் அரசு நிர்வாக நவீனமயம், தொடர்பு வியூகம், கல்வி மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகிய துறைகளுக்கு மந்திரி புசார் பொறுப்பேற்கவுள்ளார்.

கின்ராரா உறுப்பினர் இங் ஸீ ஹான் முதலீடு, வர்த்தகத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பண்டார் உத்தாமா உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுபிபினராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறை பந்திங் உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் கோத்தா அங்கிரிக் உறுப்பினர் நஜ்வான் ஹலிமி இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்.

சிகிஞ்சான் உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற சபாநாயகருமான இங் சுயி லிம் ஊராட்சி மன்றம் மற்றம் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் சுங்கை ஆயர் தாவார் உறுப்பினர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கிராம மேம்பாடு மற்றும் ஒற்றுமைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

மேலும், பாண்டான் இண்டா தொகுதி உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் அடிப்படை வசதிகள் மற்றும் வேளாண் துறைக்கும் பெர்ஹான் அமான் ஷா வீடமைப்பு மற்றும் கலாசாரத் துறைக்கும் பொறுப்பேற்கவுள்ளனர்.

ஸ்ரீ செத்தியா தொகுதி உறுப்பினர் டாக்டர் முகமது ஃபாஹ்மி ஙாவுக்கு இஸ்லாமிய சமயம் மற்றும் புத்தாக்க கலாசாரத் துறையும் தாமான் டெம்ப்ளர் உறுப்பினர் அன்ஃபால் சாரிக்கு மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.


Pengarang :