MEDIA STATEMENT

வீடு புகுந்து திருட முயன்ற நபர் மரணம்- வீட்டு உரிமையாளர் உள்பட நால்வர் கைது

கோத்தா பாரு, ஆக 27- இம்மாதம் 20 ஆம் தேதி இங்குள்ள தபாங், கம்போங் பெலுக்காரிலுள்ள ஒரு வீட்டின் ஜன்னல்களை நெம்பி உள்ளே நுழைய முயன்ற போது தாக்கப்பட்டதாக  நம்பப்படும் வேலையில்லாத நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் உதவுவதற்காக  30 முதல் 50 வயதுக்குட்பட்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் மூன்று  ஆடவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ரோஸ்லி டாவுட் கூறினார்.

அவர்கள் அனைவரும் விசாரணைக்காக குற்றவியல் சட்டத்தின்  302வது பிரிவின் கீழ்  ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  என்றார் அவர்.

அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை நெம்பி உள்ளே நுழைய முயன்ற 30 வயது  சந்தே நபரை பொது மக்கள் மடக்கிப் பிடிக்க முயன்ற போது  அந்நபர் கத்தியைக் காட்டி மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக அவர் சொன்னார்.

பின்னர் அந்த ஆடவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என அவர் நேற்று   வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான  இரண்டு முந்தைய குற்றப்பதிவுகளை  கொண்ட சந்தேக நபர்  முகம் மற்றும் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக  குபாங் கிரியான் பல்கலைக்கழக  சைன்ஸ் மலேசியா  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவ்வாடவர் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்டு 24) உயிரிழந்ததை மருத்துவமனை நிர்வாகம்  உறுதிப்படுத்தியுள்ளது.


Pengarang :