EKSKLUSIFNATIONAL

சிலாங்கூரில் இந்தியர் விவகாரங்களுக்கு மந்திரி புசார் அலுவலகம் ஆட்சிக்குழுவும் இனி பொறுப்பேற்கும்

கோலாலம்பூர், ஆக 29- சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர் நலன் சார்ந்த
விவகாரங்களுக்கு மந்திரி புசார் அலுவலகமும் ஆட்சிக்குழுவும் இனி
பொறுப்பேற்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
அறிவித்துள்ளார்.

அதே சமயம், மாநிலத்திலுள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து
விவகாரங்களும் ஒரே ஆட்சிக்குழு உறுப்பினரின் கட்டுப்பாட்டில்
இல்லாமலிருப்பதை தாம் உறுதி செய்யவுள்ளதாக அவர் சொன்னார்.

இந்திய சமூகம் சார்ந்த விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை மந்திரி
புசார் அலுவலகமும் ஆட்சிக்குழுவும் இனி ஏற்றுக் கொள்ளும்
அதேவேளையில் அச்மூகத்தின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதில்
மாநிலத்திலுள்ள அனைத்து இந்தியத் தலைவர்களுக்கும் பொறுப்பு
வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள ராயல் லேக் கிளப்பில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர்
இந்திய நிர்வாக அதிகாரிகள் சங்க விருந்து நிகழ்வுக்கு தலைமையேற்று
உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத்திற்கென்று பிரத்தியேகமாக
பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இரு தொழில்முனைவோர்
மானியத் திட்டங்கள் மற்றும் அடையாளப் பத்திரங்களைப் பெறுவதற்கு
உதவும் திட்டம் ஆகியவற்றோடு ஆலயங்களுக்கு மானியம் மற்றும்
தமிழ்ப்பள்ளிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற
முன்னெடுப்புகளையும் நாம் அமல்படுத்தியுளோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்கள் யாவும் இனி கூட்டாக ஒருங்கிணைக்கப்படும். அவை
அனைத்தும் இனியும் ஒரே ஆட்சிக்குழுவின் கீழ் இருக்காது. மாறாக,
அவை மந்திரி புசார் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆட்சிக்
குழுக்களின் கீழ் செயல்படும்.

அத்திட்டங்கள் யாவும் முறையாக அமலாக்கம் காண்பதை கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த அனைத்து இந்தியத் தலைவர்களும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்
கொண்டார்.


Pengarang :