தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு வெ.20,000 நிதியுதவி- எம்.பி.ஐ. வழங்கியது

ஷா ஆலம், ஆக 30- காஜாங் மற்றும் செமினியின் மூன்று இடங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 20,000 வெள்ளியை நிவாரண நிதியாக வழங்கியது.

இந்த இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களின் பரிவைக் காட்டும் விதமாகவும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2,000 வெள்ளி வழங்கப்படுவதாக எம்.பி.ஐ. நிறுவன சமூக கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

காஜாங் தாமான் ஸ்ரீ ஜெலோக்கில் பாதிக்கப்பட்ட 8 குடும்பங்களுக்கும் செமினி, தாமான் டேசா மற்றும் ஸ்ரீ பெர்மாய் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கும் இந்த நிதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கும் துயரிலும் சோதனைகளிலும் மாநில அரசும் எம்.பி.ஐ.யும் பங்கு கொள்வதோடு அவர்களுக்கு உதவுதற்கும் தயாராக உள்ளன என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில் காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் மற்றும் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களான ஏ.ராமச்சந்திரன், ஆர். சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 


Pengarang :