SELANGOR

பிரமாண்ட அளவில் சிலாங்கூர் வான் கண்காட்சி- பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பு

ஷா ஆலம், செப் 5- இம்மாதம் 7 முதல் 9ஆம் தேதி வரை
நடைபெறவிருக்கும் சிலாங்கூர் வான் கண்காட்சியில் (எஸ்.ஏ.எஸ்.)
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 117 கண்காட்சியாளர்கள்
பங்கேற்கவுள்ளனர்.

அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங்
உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியின் மூலம் 70 கோடி
வெள்ளி மதிப்பிலான பரிவர்த்தனையைப் பதிவு செய்ய இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“இந்த பிராந்தியத்தின் ஒரே வான் வர்த்தக மற்றும் கண்காட்சி“ எனும்
கருப்பொருளிலான இந்த மூன்று நாள் நிகழ்வில் 20,000 பேர் வரை கலந்து
கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

புக்கிட் ஜெலுத்தோங் ஸ்கைபார்க் ஆர்.ஏ.சி.யில் நடைபெறும் இந்த
கண்காட்சியில் தனிநபர் விமானங்கள் விளையாட்டு விமானங்கள் உள்பட
40 விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

இந்த கண்காட்சியின் புதிய அங்கமாக டிரோன் விளையாட்டும்
இடம்பெறும். இது தவிர, 20 விமான நிறுவனங்கள் பங்கு கொள்ளும்
வேலை வாய்ப்புச் சந்தைக்கும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேர்காணலில் பங்கு
கொள்வோருக்கு ஆலோசக சேவை மற்றும் தகவல் தொடர்பு
பயிற்சியையும் வழங்குவார்கள்.

மாநிலத்தில் வான் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்
நோக்கில் மாநில அரசு கடந்த 2021 முதல் இந்த சிலாங்கூர் வான்
கண்காட்சியை நடத்தி வருகிறது. சிறு மற்றும் நடுத்தரத்
தொழில்முனைவோர் வான் போக்குவரத்துத் துறையில் ஊடுருவதற்கு
உதவுவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியின் வாயிலாக 200
கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகளைப் பெற முடியும் என்று
முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் கடந்த
மார்ச் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :