SELANGOR

அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் அனைவருக்கும் அனுகூலம் தரும் அணுகுமுறை- குணராஜ் புகழாரம்

கிள்ளான், செப் 6- இந்தியர்களின் பாரம்பரியத் தொழில்களாக விளங்கும்
சிகையலங்காரம், ஜவுளி மற்றும் நகை வியாபாரத் துறைகளுக்கு அந்நியத்
தொழிலாளர்களை தருவிக்க அனுமதிக்கப்படும் என்ற பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிமின் அறிவிப்பை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்
டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு
ஆக்ககரமான மற்றும் முன்னோக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது
என்று அவர் வர்ணித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பின் வழி இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த
வர்த்தர்களும் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த தொழிலாளர்
பற்றாக்குறைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்திய வர்த்தகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தங்களின்
பொறுப்புணர்வை வெளிப்படுத்திய அரசாங்கத்திற்கு குறிப்பாக, மனிதவள
அமைச்சர் வ.சிவக்குமாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துறைகள் பெரும்பாலான இந்திய வணிகர்களுக்கு அடித்தளமாக இருந்து
வருகின்றன. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டதன்
வழி அனைத்து சமூகங்களுக்கும் உகந்த வர்த்தகச் சூழலை ஏற்படுத்தித்
தருவதில் தனக்குள்ள கடப்பாட்டை அரசாங்கம் புலப்படுத்தியுள்ளது என்று
அவர் தெரிவித்தார்.

திறன் பெற்றத் தொழிலாளர்களைக் கொண்டிருப்பதன் மூலம் நாட்டின்
பொருளாதாரத்திற்கு உரிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கும்
ஆக்கத்திறனை இந்த வர்த்தகத் துறையினர் பெற்றிருக்க இயலும் என்று
அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சபை மற்றும் இதர வர்த்தக அரசு
சாரா அமைப்புகள் எழுப்பிய பிரச்சனைகளை கனிவுடன் செவிமடுக்க முன்வந்த பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்
சொன்னார்.

நாடு தொடர்ந்து வளப்பத்துடனும் சுய சார்புடனும் இருப்பதை உறுதி
செய்ய நமது இளைஞர்களுக்கு குறிப்பாக மேற்கண்ட அந்த மூன்று
துறைகளில் உரிய பயிற்சிகளை வழங்குவது அவசியம் என்றும் குணராஜ்
வலியுறுத்தினார்.


Pengarang :