NATIONAL

உலகளாவிய நிலையில் இளைஞர்கள் மத்தியில் புற்று நோய் அதிகரிப்பு

லண்டன், செப் 6 – உடல் பருமன் மற்றும் மது
அருந்துதல் போன்ற காரணங்களால்
உலகளாவிய நிலையில் இளைஞர்கள்
மத்தியில் புற்றுநோய் பாதிப்புகள்
கவலையளிக்கும் வகையில் அதிகரித்து
வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த 1990 மற்றும் 2019 க்கு இடையில் 50
வயதுக்குட்பட்ட புதிய புற்றுநோயாளிகளின்
எண்ணிக்கை 79 சதவீதம் அதிகரித்திருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இங்கிலாந்தில் கடந்த 2010
முதல் 2019 வரை இந்நோயினால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
தொடர்ந்து நிலையாக இருந்து வரும்
வேளையில் இறப்பு விகிதமும் தொடர்ந்து
குறைந்து வருகிறது என்று ஜெர்மன் செய்தி
நிறுவனம் (டிபிஏ) தெரிவித்துள்ளது.

204 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள
29 விதமான புற்றுநோய்களுக்கான
குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் 2019
ஆய்வின் தரவை எடின்பர்க் பல்கலைக்கழகம்
மற்றும் சீனாவில் உள்ள ஜெஜியாங்
யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின்
ஆகியவற்றின் குழு ஆய்வு செய்தது.

14 முதல் 49 வயதுடையவர்கள் சம்பந்தப்பட்ட புதிய புற்று நோய்ச்
சம்பவங்கள், இறப்புகள், உடல்நல
பாதிப்புகள் மற்றும் ஆபத்துக்கான
காரணங்களைக் கொண்டு ஒவ்வொரு
ஆண்டும் வருடாந்திர சதவீதத்தை
அக்குழுவினர் மதிப்பிடுகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டில் 50
வயதிற்குட்பட்டவர்கள் மத்தியில் 32 லட்சத்து
6 ஆயிரம் புதிய புற்றுநோய் சம்பவங்கள்
கண்டறியப்பட்டன. இது கடந்த 1990
ஆண்டைக் காட்டிலும் 79.1 விழுக்காடு
அதிகமாகும். அதே சமயம் இறப்புகளும் 27.7
சதவீதம் அதிகரித்துள்ளது.

புற்று நோயின் தாக்கத்திற்கு மரபியல்
காரணம் ஒரு பங்கை வகிக்கும் அதே
வேளையில் புகைபிடித்தல், மது அருந்துதல்
மற்றும் இறைச்சி மற்றும் உப்பு அதிகம் உள்ள
உணவுகள் அதிகம் எடுப்பது , பழங்கள் மற்றும் பால் போன்ற உணவுகளை
குறைவாக உட்கொள்வது ஆகியவை முக்கிய
காரணங்களாக உள்ளன. இவை தவிர அதிக
எடை, குறைவான உடற்பயிற்சி மற்றும்
உயர் இரத்த அழுத்தம் போன்றவையும்
காரணங்களாக விளங்குகின்றன.

மார்பகப் புற்றுநோய் அதிக பாதிப்பை
ஏற்படுத்தும் நோயாக உள்ளது. 100,000
பேரில் 13.7 பேர் இந்நோயினால்
பாதிக்கப்படுகின்றனர் – மூச்சுக்குழாய் மற்றும்
புரோஸ்டேட் புற்றுநோய் ஆண்டுக்கு
முறையே 2.28 மற்றும் 2.23 விழுக்காடு என்ற
அளவில் வேகமாகப் பரவி வருகிறது.

இருப்பினும், ஆரம்பகால கல்லீரல்
புற்றுநோய் சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும்
2.88 சதவீதம் குறைந்துள்ளன.


Pengarang :