SELANGOR

பெண்களுக்கான விளையாட்டு போட்டி வருடாந்திர நிகழ்வாக மாற்ற பரிசீலிக்கப்படும் – தேசிய விளையாட்டு கவுன்சில்

காஜாங், செப்டம்பர் 7: பெண்களுக்கான விளையாட்டு போட்டியின் மூலம் அதிக திறமைகளை வெளிக்கொணரும் முயற்சியாக அதை வருடாந்திர நிகழ்வாக மாற்ற தேசிய விளையாட்டு கவுன்சில் (MSN) பரிசீலிக்கும்.

இந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் சாதகமான வரவேற்பு கிடைத்தபோது, தாம் நெகிழ்ந்து போனதாக தேசிய விளையாட்டு கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் டத்தோ அஹ்மத் ஷபாவி இஸ்மாயில் கூறினார்.

“இந்நிகழ்வு வாய்ப்பிருந்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும். அதில் அனைத்து விளையாட்டுகளையும் ஒன்றிணைக்க முயற்சிப்போம், ஏனெனில் தற்போது அதில் நான்கு விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

“இது போட்டி விளையாட்டு சுக்மா போல் மாறுவதை நாங்கள் விரும்பவில்லை, மாறாக இந்நிகழ்வு பெண்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கவும் பயிற்சி செய்யவும் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தங்கள் நண்பர்களைச் சந்திக்கவும் ஒரு தளமாக அமைய வேண்டும்,” என்று அவர் 2023 ஆம் ஆண்டு மகளிர் விளையாட்டு நிகழ்வின் நிறைவு விழாவிற்குப் பிறகு இவ்வாறு கூறினார்.

2023 மகளிர் விளையாட்டு போட்டியில் கால்பந்து, கூடைப்பந்து , ஹாக்கி மற்றும் ரக்பி என மொத்தம் நான்கு போட்டிகள் இடம்பெற்றன. இதில் நாடு முழுவதிலுமிருந்து 700 விளையாட்டாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்விற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவும் வருகை புரிந்தார்.

– பெர்னாமா


Pengarang :