SELANGOR

டெலிகோம் கேபிள் திருட்டுக் கும்பல் முறியடிப்பு- நான்கு போலீஸ்காரர்கள் உள்பட 13 பேர் கைது

பெட்டாலிங் ஜெயா, செப் 27- டெலிகோம் மலேசியா நிறுவனத்திற்குச்
சொந்தமான மின் இணைப்பு கேபிள்களைத் திருடுவதில் கைதேர்ந்த
கும்பலை முறியடித்த காவல் துறையினர் இதில் தொடர்புடையவர்கள்
என சந்தேகிக்கப்படும் நான்கு போலீஸ்காரர்கள் உள்பட 13 பேரைக் கைது
செய்தனர்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த வாகன
ரோந்துப் பிரிவின் அந்த நான்கு உறுப்பினர்களும் கடந்த 19ஆம் தேதி
இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாக்ருடின் ஹமிட் கூறினார்.

பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த 40 மீட்டர் நீளம் கொண்ட இரு
கேபிள்கள் கொள்ளையிடும் நோக்கில் வெட்டியெடுக்கப்பட்டதால்
தொலைபேசி மற்றும் இணையத் தரவு சேவையில் இடையூறு
ஏற்பட்டதோடு சுமார் ஒரு லட்சம் வெள்ளி இழப்பும் ஏற்பட்டதாக
டெலிகோம் மலேசியா நிறுவனத்திடமிருந்து தாங்கள் முன்னதாகப்
புகாரைப் பெற்றிருந்ததாக அவர் சொன்னார்.

இந்த புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட பெட்டாலிங்
மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் டி4
பிரிவு மற்றும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தின் சிறப்பு
பணிப்படை சந்தேகத்தின் பேரில் நான்கு போலீஸ்காரர்களை
விசாரணைக்காக தடுத்து வைத்ததாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில்
நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஐந்து
இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டு 20 முதல் 40 வயது
வரையிலான ஒரு அந்நிய நாட்டுப் பெண் உள்பட ஒன்பது பேரை கைது
செய்தனர் என்றார் அவர்.

எழு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை காவல் துறையில்
பணியாற்றியுள்ள அந்த நான்கு போலீஸ்காரர்களும் தற்போது பணியிடை
நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திருட்டுக் கும்பலுடன்
தொடர்பிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :