SELANGOR

அரிசி கையிருப்பு குறைந்தால் மாநில அரசின் சிறப்பு பிரிவிடம் புகார் அளிப்பீர்- மந்திரிபுசார் வேண்டுகோள்

ஷா ஆலம், செப் 27- மாநிலத்தின் எந்த பகுதியிலாவது அரிசி
விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் அது குறித்து சிலாங்கூர் அரசின்
அரிசி மற்றும் நெல் கடப்பாட்டுப் பிரிவிடம் புகார் அளிக்கும்படி பொது
மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரிசி விநியோகப் பற்றாக்குறை தொடர்பில் புகார் கிடைத்த 24 மணி
நேரத்தில் அப்பிரிவு தீவிரமாக செயல்பட்டு பற்றாக்குறையை நிவர்த்தி
செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்களுக்கு உதவும் அதேவேளையில் அவர்கள் பதட்டத்தில் அந்த உணவுப்
பொருளை அதிகமாக வாங்கி கையிருப்பு வைப்பதை தடுக்கும் நோக்கில்
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அதிகமானோர்
பயன்பெறுவதற்கு ஏதுவாக இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்
என அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

அரிசி பற்றாக்குறை தொடர்பான புகார்களை 03-32898419 என்ற எண்களில்
அல்லது 017-2230771 என்ற வாட்ஸ்ஆப் எண்களில் தொடர்பு கொண்டு
வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டு இறுதி வரை மாநில மக்களுக்குத் தேவையான உள்நாட்டு
வெள்ளை அரிசி கையிருப்பு உள்ளதாக அமிருடின் இம்மாதம் 21ஆம் தேதி
உறுதியளித்திருந்தார்.

தற்போது மாநில அரசிடம் 20,000 மெட்ரிக் டன் அரிசி உள்ளது. ஆகவே
சந்தையில் பற்றாக்குறை ஏற்படும் போது அதனை ஈடு செய்வதற்கு
ஏதுவாக வைக்கப்பட்டிருக்கும் கையிருப்பிலிருந்து அரிசியைப் எடுக்க
வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :