SELANGOR

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர் தங்கும் விடுதி அக்டோபர் 1ஆம் தேதி செயல்படத் தொடங்கும்

ஷா ஆலம், செப் 27- இங்குள்ள மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் மாணவர்
தங்கும் விடுதி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி செயல்படும்
என்று அப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் கே. உதயசூரியன்
தெரிவித்தார்.

முதல் கட்டமாக இந்த விடுதியில் 15 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்
என்றும் பின்னர் அந்த எண்ணிக்கை கட்டங் கட்டமாக அதிகரிக்கப்படும்
என்றும் அவர் கூறினார்.

நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலக்கூடிய இந்த மாணவர்கள்
அனைவரும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும்
பி40 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்று அவர் சொன்னார்.

வறுமை மற்றும் வசதி குறைவு காரணமாக தங்கள் பிள்ளைகளை
பள்ளிக்கு அனுப்ப இயலாத நிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கு
உதவும் நோக்கிலும் அம்மாணவர்களுக்கும் உரிய கல்வி வாய்ப்பு
வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இந்த தங்கும் விடுதியை
தாங்கள் தொடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மாணவர்கள் அனைவருக்கும் தங்குமிடம், உணவு மற்றும் இதர
அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். இவர்கள்
மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் தங்கள் கல்வியைத் தொடரும்
வேளையில் விளையாட்டு மற்றும் இதர இணைப்பாட நடவடிக்கைளிலும்
பங்கேற்று தங்களின் ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குரிய வாய்ப்பு
வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் ஒவ்வொரு மாணவரின்
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் ஒன்றுக்கு 1,000 வெள்ளி
வரை தேவைப்படுகிறது. மாநில அரசு இவ்வாண்டு வழங்கிய 300,000
வெள்ளியை மானியத்தைக் கொண்டு இத்திட்டத்தை தொடக்கியுள்ளோம்.

அடுத்தாண்டிலும் மாநில அரசின் நிதியுதவி தொடர்ந்து கிடைக்கும் என
எதிர்பார்க்கிறோம் என்று உதயசூரியன் குறிப்பிட்டார்.

மாநில அரசின் 40 லட்சம் வெள்ளி மானியத்துடன் மிட்லண்ட்ஸ்
தமிழ்ப்பள்ளிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில்
200 மாணவர்கள் வரை தங்கிப் படிப்பதற்கான வசதிகள் உள்ளன.

அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதியைக் கொண்ட
நாட்டின் ஒரே தமிழ்ப்பள்ளியாக மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி
விளங்குகிறது.


Pengarang :